Published : 02 Mar 2017 11:12 AM
Last Updated : 02 Mar 2017 11:12 AM

அரசை எதிர்பார்க்காமல் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்ட கிராமம்: சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்த மக்கள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு அரசை எதிர்பார்க்காமல், கிராம மக்களே தங்கள் சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பருவமழை ஏமாற்றியதால் கடந்த ஒரு ஆண்டாகவே, மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. தற்போது வைகை ஆறும், பெரியாறு பாசனக் கால்வாயும் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று, நகர் முதல் கிராமங்கள் வரை குடிநீர் பஞ்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதனால், பல இடங்களில் மக்கள் குடிநீர் கேட்டு சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து, போர்க்கால நடவடிக்கையாக கிராமங்களில் அதிகாரிகள் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நமக்கு நாமே கிராமம்

அலங்காநல்லூர் ஒன்றியம், பாரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில் 400-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 1500-க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமம் கிழுவைமலை அடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தினர், சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கிறார்கள். கடந்த காலங்களில், இந்த கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்ததே இல்லை. அதனால், விவசாயம் தடையின்றி நடந்தது. இந்த கிராமத்துக்கு அருகே உள்ள கல்லூத்தில் குடிதண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால், வறட்சியான காலங்களில் இந்த கல்லூத்தில் இருந்து குடிநீர் எடுத்து கிராம மக்கள் சமாளித்துவிடுவர்.

ஆனால், இந்தாண்டு கடும் வறட்சியால் கல்லூத்திலும் தண்ணீர் இல்லை. அதனால், கடந்த 3 மாதங்களாக சரந்தாங்கி கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். சில வாரங்களுக்கு முன் இக்கிராம மக்கள் ஒன்று திரண்டு அலங்காநல்லூர் ஒன்றிய ஆணையரிடம் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுத்தனர். ஆனால், வறட்சியால் அதிகாரிகளாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து கிராம மக்கள் ஒன்றுகூடி, குடிநீர் பிரச்சினைக்கு அரசை எதிர்பார்க்காமல் தங்கள் சொந்த செலவில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் கிராமத்துக்கு சொந்தமான இராவூத்தர் ஊத்து பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தனர்.

அங்கிருந்து சரந்தாங்கிக்கு குழாய் அமைத்து மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி, தற்போது குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழங்கி வருகின்றனர். கூட்டு முயற்சியால் குடிநீர் பிரச்சினை தீர்ந்ததால் அம்மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த தவமணி என்பவர் கூறியதாவது:

குடிநீர் இல்லாமல், கடந்த 3 மாதங்களாக நாங்கள் பட்ட சிரமத்துக்கு அளவே இல்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் வேறு வழியின்றி நாங்களே நன்கொடை போல யாரையும் கட்டாயப்படுத்தாமல் கிராமத்தில் வீடு வீடாக 500 ரூபாய், 1000 ரூபாய் வசூலித்து ஆழ்துளை கிணறு அமைத்தோம்.

எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க, காவரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பாரப்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, பஞ்சாயத்தில் ஊதியம் வழங்கவே நிதி இல்லை. அதனால், அக்கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x