Last Updated : 22 Jan, 2017 02:24 PM

 

Published : 22 Jan 2017 02:24 PM
Last Updated : 22 Jan 2017 02:24 PM

கடந்த ஆண்டில் 7 புலிகள் இறப்பு: புலிகளை வேட்டையாடுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை - வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் 7 புலிகள் உட்பட இந்தியா முழுவதும் கடந்தாண்டு 98 புலிகள் இறந்துள்ளன. புலிகளுக்கு விஷம் வைத்தல், வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 40 ஆயிரமாக இருந்தது. அதிகளவு வேட்டை, விஷம் வைத்தல் போன்ற காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 17 மடங்கு குறைந்துவிட்டது. இந்நிலையில் புலிகளை காக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலி்ல் சேர்த்து, காப்பகங்கள் அமைக்கப்பட்டு, எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பலன் கிடைத் துள்ளது.

சமீபத்திய ஆய்வின்படி, உலகில் உள்ள புலிகளின் எண் ணிக்கையில் இந்தியா 70 சத வீதத்தை கொண்டுள்ளது. கடந்த 2006-ல் 1,141 ஆக இருந்த புலிகள், 2010-ல் 1,706 ஆகவும், கடந்த 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,226 ஆகவும் உயர்ந்துள்ளன.

மாநில அளவில் புலிகளின் எண்ணிக்கையில் கர்நாடகா (406) முதலிடத்திலும், உத்தராகண்ட் (340) 2-வது இடத்திலும், மத்திய பிரதேசம் (308) 3-வது இடத்திலும் உள்ளது. 4-ம் இடத்தை தமிழகம் (229) பிடித்துள்ளது. குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு முயற்சிகள் எடுத் தாலும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு தேசிய அளவில் 63 புலிகள், 2014-ல் 60, 2015-ல் 70 புலிகள் இறந்துள் ளன. கடந்தாண்டு புலிகள் இறப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித் துள்ளதாக தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம் தெரிவித்துள் ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 2013-ல் 2 புலிகளும், 2014-ல் அதிகபட்சமாக 13 புலிகளும், 2015-ல் 5 புலிகளும், கடந்தாண் டில் 7 புலிகளும் இறந்துள் ளன.

தமிழகத்தில் கடந்த இரண் டாண்டுகளில் மனிதர்களை தாக்கிய 2 புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. கடந்த ஆண்டு அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 30 புலிகள் இறந்துள்ளன. இவற்றில் 3 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள் ளன.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களில் 9 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, புலிகள் இனத்தை காக்க, வேட்டை, விஷம் வைத்தல் தடுக்கப்பட வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ‘ஓசை’ சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறியதாவது:

புலிகளை பொறுத்தவரை வாழ் நாள் 10 முதல் 14 ஆண்டுகள் வரைதான். அப்படிப் பார்த்தால் கடந்த 2000-ம் ஆண்டில் பிறந் தவை தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. இயற்கை மரணம் பற்றி கவலைப்பட வேண் டியதில்லை. விஷம் வைத்தல், கள்ள வேட்டை இவற்றை தடுப்பது அவசியம்.

வாழ்விடம் சுருங்கி விட்டதால், புலிகள் காப்பகங்களை விட்டு காப்புக் காடுகளிலும் புலிகள் வசிக்க தொடங்கிவிட்டன. அங்கு அவற்றுக்கான இரை விலங்குகள் கிடைக்காவிட்டால், அருகி்ல் வசிப்பவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை உணவாக்குகின்றன. இதனால் அவர்கள் விஷம் வைக்கின்றனர்.

இதைத் தடுக்க, கால்நடை இழப்புக்கு உரிய இழப்பீடு உடனடியாக கிடைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை உடனடியாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் இதை நடைமுறைப் படுத்துவதை தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வேட்டையையும் கட்டுப் படுத்த வேண்டும். அதற்கு அதிக நிதி ஒதுக்குவதுடன், பணியாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புலிகள் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வனத்துறையில் ஆட்கள் இல்லை

தமிழகத்தில் ஒவ்வொரு காப்பகத்திலும் புலிகளை காக்க வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் ஷிப்ட் அடிப்படையில் வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர் பணியில் உள்ளனர். இதனால், வனப்பகுதியை விட்டு குடியிருப்புக்குள் நுழையும் யானை உள்ளிட்ட விலங்குகளை காட்டுக்குள் அனுப்ப ஆட்கள் போதுமான அளவு இல்லை.

இது தொடர்பாக, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “வேட்டை தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள்தான், ஊருக்குள் யானை புகுந்தாலும் வந்து விரட்ட வேண்டும். வனத்துறையில், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் பணியிடங்கள் 40 சதவீதம் காலியாக உள்ளன. நேரடி நியமனம் மூலம் வனச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் வேட்டையை தடுக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x