Last Updated : 29 Jan, 2014 12:00 AM

 

Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?- மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேநேரம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் மாநாடு நடைபெறுமா எனக் கேள்விக்குறி எழுந்துள்ளது.

தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டுக் கடந்த 11-ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி அளித்தோ, அனுமதி மறுக்கப்பட்டதாகவோ எந்த பதிலும் தேமுதிகவுக்கு வரவில்லை. அப்படி தடை செய்யப்படுவதாக எழுத்துபூர்வமாகத் தெரிவித்தால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், இன்னமும் அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு ஜனவரி 31-ம் தேதி மாலை அனுமதி மறுக்கப்பட்டதாக எழுத்துபூர்வமாகப் பதில் அளிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப். 1 சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் தேமுதிக நீதிமன்றம் செல்ல முடியாது என்பதாலேயே இன்னும் அனுமதி தொடர்பான எந்த உத்தரவும் அரசுத் தரப்பில் அளிக்கவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாநாட்டுக்குத் தடை விதிக்கப்படும்பட்சத்தில் அந்த மாநாட்டுக்கு ஆட்களை வாடகை வாகனங்கள் ஆட்களை ஏற்றிச் செல்லாமல் இருக்கவே அந்தந்தப் பகுதி வாடகை கார் உரிமையாளர்களின் கூட்டத்தைக் காவல் துறை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இதை உறுதி செய்யும்விதத்தில் திண்டிவனம் டிஎஸ்பி சிலம்பரசன் தலைமையில் திங்கள்கிழமை வாடகை கார் ஓட்டுநர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கார் உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களைக் காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும். தமிழக அரசு தடை செய்யும் அமைப்புகளுக்கும், மாநாட்டுக்கும் வாடகை கார் செல்லக்கூடாது. ஓங்கூர் செக் போஸ்ட்டில் வாகனச் சோதனை செய்து தடை செய்யப்பட்ட மாநாட்டுக்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேனர்

டிஜிட்டல் விளம்பரப் பேனர் வைக்க அனுமதி கோரி 25-ம்தேதி தேமுதிக அளித்த மனுவுக்கும் இதுவரை பதிலில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைப்பது சட்டப்படி குற்றம். 15 நாட்களுக்கு முன்பே அந்தந்த வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கும்போது எங்குப் பேனர் வைக்கப்படுகிறதோ அந்த இடம் தனியாருக்குச் சொந்தமாக இருந்தால் இடத்தின் உரிமையாளரிடமும், அரசுக்குச் சொந்தமாக இருந்தால் அந்தத் துறையில் தடையில்லா சான்று பெற்று அத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் தேமுதிக மாநாட்டைத் தடை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசனிடம் பேசியபோது, “உணர்ச்சிவசப்பட்டு எதுவும் சொல்ல முடியாது, மாநாட்டுக்கு தடை என சொல்லட்டும். பின்பு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்றார்.

எம்எல்ஏ பார்த்திபனிடம் கேட்டபோது, “எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம் தேமுதிக. சட்டவிரோதமாக அதிகாரிகள் நடந்துகொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். திட்டமிட்டப்படி மாநாடு நடக்கும்” என்றார். இதே கருத்தை மாவட்டப் பொருளாளர் செஞ்சி சிவாவும் கூறினார். இந்தச் சூழலில் மாநாட்டு ஏற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x