Published : 12 Sep 2016 07:31 PM
Last Updated : 12 Sep 2016 07:31 PM

தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறை நடக்காமல் தடுக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

காவிரி பிரச்சினைக்காக தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதும் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதக் கூடாதா? நேரில் சந்திக்கக் கூடாதா? என தஞ்சை விவசாயி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1983-ம் ஆண்டு காவிரி பிரச்சினையால் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். நான் எதிர்க்கட்சித் தலைவர். ஆனாலும் பெங்களூரு சென்று அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவை சந்தித்தேன். ''இரு மாநில முதல்வர்கள் சந்திப்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் காய்ந்து கொண்டிருக்கும் சம்பா, தாளடிப் பயிர்களைக் காப்பாற்ற தேவையான தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்'' என நட்பு ரீதியாக கேட்டுக் கொண்டேன். ''நீங்களே நேரில் வந்து கேட்கிறீர்கள். முடிந்ததைச் செய்கிறேன்'' என்றார் ஹெக்டே. அவ்வாறே செய்தார். அப்போது எனக்கு வயது 59. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் நமக்கென்ன என இருந்து விடாமல் நேரில் சென்று கேட்க முடிந்தது.

'கொண்டவன் சரியில்லை என்றால் கண்டவன் எல்லாம் கடுங்கோபத்துடன் காலால் எட்டி உதைப்பான்' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்த நிலையில்தான் தமிழர்கள் உள்ளனர். பெங்களூருவில் சந்தோஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதனைப் படித்துவிட்டு தமிழகத்திலும் பரவலாக இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெறுவதாக வரும் செய்திகள் பெரும் வருத்தத்தை அளிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் கர்நாடகத்தில் நடந்தாலும், தமிழகத்தில் நடந்தாலும் அது தேவையற்றவை என்பது தான் எனது கருத்து. இனியும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

பரம்பிக்குளம் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பியதாதச் செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே பலமுறை தமிழக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழக பொதுப்பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளை கேரள வனத்துறையினர் உடைத்திருருக்கிறார்கள். தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும்.

உமாபாரதிக்கு கண்டனம்

காவிரிப் பிரச்சினையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி கர்நாடகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மக்களிடம் வேறுபாடு காட்ட மாட்டேன் என பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஒரு மாநிலத்துக்கு ஆதரவாக நடந்து கொள்வது சரியல்ல. கர்நாடகம் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்ற உமாபாரதியின் கருத்து கண்டனத்துக்குரியது.

எங்கே போய் முறையிடுவது?

மாநில தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர் உள்ளிட்ட 10 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாக அறிந்து கொள்ளவே மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், தகவல் ஆணையத்தில் காலியிடங்கள் இருப்பதால் பணிகள் தாமதம் ஆகிறதாம். மாநிலத் தகவல் ஆணையம் இந்த நிலையில் இருந்தால் தகவல் பெற விரும்பும் பொதுமக்கள் எங்கே போய் முறையிடுவார்கள்?

புலனாய்வுப் பணிகளில் தமிழக காவல் துறையினர் பின்தங்கியிருப்பதால் தமிழகத்தில் 80 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் நிலை இதுதான்.

அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் அதனை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக தி இந்து தமிழ் நாளிதழில் அனைத்துக் கட்சி கூட்டம் அவசியமாகிறது ஏன்? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது ஆலோசனை பெறுவதற்கு மட்டுமல்ல, காவிரிப் பிரச்சினையில் தமிழகம் ஓரணியில் நிற்கிறது என்பதை வெளிப்படுத்த இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998-ல் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பேச முதல்வராக இருந்த என்னை அழைத்தார். உடனே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன்.

சட்டப்பேரவை விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் அனைத்துக்கட்சிகளைக் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. இதன் மூலம் விதிகளை தமிழக அரசு எந்த அளவுக்கு பின்பற்றுகிறது என்பது தெளிவாகிறது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x