Last Updated : 21 Apr, 2017 11:03 AM

 

Published : 21 Apr 2017 11:03 AM
Last Updated : 21 Apr 2017 11:03 AM

அளவுக்கதிகமாக சுரண்டப்படும் மணல்; உறிஞ்சப்படும் தண்ணீரால் காடான வெள்ளாறு - மேம்பாலம் கட்டப்படுவது எப்போது?

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகும் வெள்ளாறு சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களுக்கிடையே ஒடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

இது ஒரு சிறிய ஆறு, இதன் நீளம் 193 கி.மீ. ஆண்டில் பாதி நாட்கள் தண்ணீரின்றி வறண்டே காணப்படும், மழைக்காலங்களில் மட்டுமே அதிகளவு தண்ணீர் வெள்ளம்போல செல்லும்.

சுவேதா ஆறு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு, அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆணைவாரி ஓடை, கடலூர் மாவட்டத்தில் செல்லும் மணிமுத்தாறு போன்றவை வெள்ளாற்றின் துணை ஆறுகள். மழைக்காலங்களில் நிலப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த துணை ஆறுகளின் வழியே வெள்ளாற்றுடன் கலக்கும்.

இந்த ஆற்றின் குறுக்கே தொழுதூர், விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளாறு அரியலூர், கடலூர் மாவட்டங்களைப் பிரிக்கும் வகையில் சுமார் 35 கி.மீ. தொலைவுக்குச் செல்கிறது.

ஆற்றின் வடக்குப் பகுதியில் கடலூர் மாவட்டத்தின் பெண்ணாடமும், தெற்கு பகுதியில் அரியலூர் மாவட்டத்தின் செந்துறை தாலுகாவும் உள்ளன. இப்பகுதியில்தான் வெள்ளாற்றில் ஆணைவாரி ஓடை, சின்னாறு ஆகியன கலக்கின்றன. வெள்ளாறு ஓடுவதால் இருகரையிலும் இருக்கும் மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என நினைத்தால் அது தவறான கருத்து.

காரணம், வெள்ளாற்றுக்கு அருகே அரியலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் அருகருகே இரண்டு பெரிய சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தேவையான தண்ணீர் வெள்ளாற்றின் அருகே ராட்சத போர்வெல்கள் அமைத்து நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் உறிஞ்சப்படுகிறது.

மேலும், தனியார் சிமென்ட் ஆலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீரும் வெள்ளாற்றிலேயே விடப்படுவதால், குடிநீருக்காக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காடாக மாறிய ஆறு

இவை ஒருபுறம் இருக்க, வெள்ளாற்றில் கடந்த பல ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட எல்லையில் தற்போது அரசு மணல் குவாரி செயல்பட்டுவரும் நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் மணல் இல்லாத ஆறாக வெள்ளாறு உள்ளது. ஆறு முழுவதும் கோரை, சீமைக் கருவேல மரங்கள், சம்பு போன்றவை முளைத்து தற்போது காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சிமென்ட் ஆலைகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது.

இதுபோன்ற செயல்களுக்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பது மட்டுமின்றி, இருமாவட்ட மக்களையும் ஏமாற்றி வருவதாக வெள்ளாற்றின் கரையோரத்தில் இருக்கும் கிராம மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றின் கரையோரத்தில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தின் வெள்ளாற்றின் கரையோரத்தில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்துக்கு பயன்படும்வகையில் இரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆட்சியர்கள் மாநாட்டில், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செந்துறை- கோட்டைக்காடு சாலை சீரமைக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், இதுவரை மேம்பாலம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைப்பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது.

சமூக ஆர்வலர் அருண்மொழிவர்மன் கூறியது:

வெள்ளாறு முன்பெல்லாம் பலஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்தும், நிலத்தடி நீராதாரத்தை பாதுகாத்தும் வந்தது. ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதாலும், ஆற்றின் அருகே உள்ள சிமென்ட் ஆலைகள் ராட்சத போர்வெல்கள் போட்டு தண்ணீர் உறிஞ்சுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், அதிக ஆழத்தில் சிமென்ட் ஆலைகள் வெட்டிய சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடாமல் விட்டுள்ளதால் அச்சுரங்கத்தின் தண்ணீர் கடல்போல உள்ளது. அத்தண்ணீரை பொதுமக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்த சிமென்ட் ஆலைகளோ அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முள்ளுக்குறிச்சி விவசாயி நடராஜன் கூறியது:

இரு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையிலும், போக்குவரத்துக்காகவும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக அரசு இருமாவட்ட மக்களையும் ஏமாற்றி வருகிறது.

வெள்ளாற்றின் இருகரையிலும் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். தனியார் சிமென்ட் ஆலைகளால் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை அப்புறப்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் வெள்ளாற்றின் குறுக்கே இருமாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x