Published : 08 Aug 2016 03:32 PM
Last Updated : 08 Aug 2016 03:32 PM

தொழில் முதலீட்டில் தமிழகம் 10-வது இடம்: ராமதாஸ் கவலை

இந்தியாவில் அதிகளவில் தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குவிந்த தொழில் முதலீடுகள், அதைக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றில் வேலை பெற்ற பணியாளர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் அதிகளவில் தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று ஆட்சியாளர்களால் எழுப்பப்பட்ட முழக்கங்கள் எல்லாம் பொய் என்பதை மத்திய அரசின் புள்ளி விவரம் நிரூபித்திருக்கிறது.

இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை மத்திய தொழில் மற்றும் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலை அத்துறை தயாரித்து வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் அண்டை மாநிலமான கர்நாடகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் அம்மாநிலத்தில் ரூ.67,757 கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது இந்தியா முழுவதும் வந்துள்ள முதலீட்டு கோரிக்கைகளில் 38.34% ஆகும்.

ரூ.21,309 கோடி முதலீட்டு கோரிக்கைகளுடன் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. மராட்டியம் (ரூ.15,688 கோடி), தெலுங்கானா(ரூ.13,600 கோடி), சத்தீஸ்கர்(ரூ.8,514 கோடி), ஆந்திரம் (ரூ.8,405 கோடி) ஆகியவை முறையே 3 முதல் 6 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன. தமிழகம் ரூ.3539 கோடி முதலீட்டு கோரிக்கைகளுடன் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் ரூ. 2,24,160 கோடி முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்த தொகை ரூ.19,811 மட்டுமே.

கடந்த ஆண்டிலும் குஜராத், சத்தீஸ்கர், மராட்டியம், கர்நாடகம், ஒரிசா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக 7 ஆவது இடத்தை மட்டுமே தமிழகத்தால் பிடிக்க முடிந்தது. 2014 ஆம் ஆண்டில் தமிழகம் ரூ.14,598 கோடி முதலீட்டுக் கோரிக்கைகளுடன் தமிழகம் 8 ஆவது இடத்தில் இருந்தது. 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை ஒரு முறை கூட தமிழகத்தால் முதல் 5 இடங்களில் வர முடியவில்லை.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு கடந்த 23.06.2016 அன்று பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா,''இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. தொழிலாளர் திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார சூழ்நிலை, நிர்வாக ஆளுமை ஆகியவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் 54 நிறுவனங்கள் மூலம் 23,258 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு பலர் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 31,706 கோடி ரூபாய் முதலீடுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,00,101 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய புள்ளி விவரங்கள் அனைத்தும் உண்மையற்றவை; தவறானவை என்பதை எதுவும் அறியாத பாமரர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

2015 ஆம் ஆண்டில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் மதிப்பே ரூ.19,811 கோடி தான் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் ரூ.23,258 கோடி முதலீடு செய்யப்பட்டு, அதில் பலருக்கு வேலையும் வழங்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா கூறுகிறார்.

வழக்கமாக முதலீட்டு கோரிக்கைகள் முழுமையாக செயல்வடிவம் பெறுவதில்லை. ரூ.10,000 கோடி முதலீடு செய்வதாக முதலீட்டாளர்கள் அறிவித்தால், அதில் 80%, அதாவது ரூ.8,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டாலே அது சாதனை தான். ஆனால், முதலீட்டு கோரிக்கையை விட அதிக முதலீடு செய்யப்பட்டதாக ஜெயலலிதா கூறுவதை தமிழக மக்கள் நிச்சயமாக நம்பமாட்டார்கள்;ஏமாற மாட்டார்கள்.

ஒருவகையில் பார்த்தால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இயற்கையாகவே அமைந்திருக்கிறது தான். ஒருவகையில் இது தமிழகத்திற்கு கிடைத்த வரம். ஆனால், வரத்தின் பயனை தமிழக மக்கள் அனுபவிக்க முடியாமல் தடுப்பது ஊழல் என்ற சாபம் தான்.

தமிழகத்தில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி நடந்தால் முதலீடுகள் குவியும். ஆனால், எவ்வளவு முதலீடு செய்வீர்கள்? என்பதை கேட்பதற்கு முன்பே எங்களுக்கு எத்தனை விழுக்காடு லஞ்சம் தருவீர்கள்? என்று கேட்கும் ஊழல் ஆட்சி நடப்பதால் தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் தமிழகத்தை விட அதிக முதலீடுகள் குவிந்துள்ளன. இதற்கு தமிழகத்தை விட அவை சிறந்த மாநிலங்கள் என்று பொருள் இல்லை. தமிழகத்தைவிட அங்கு ஊழல் குறைவு; வரவேற்பு அதிகம் என்பது தான் உண்மை.

இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள தொழிலதிபர்களை ஆந்திரத்தில் தொழில் தொடங்கும்படி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கோவைக்கு வந்து ரூ.12,000 கோடி முதலீட்டை ஈர்த்துச் செல்கிறார்.

ஆனால், தமிழக முதல்வரோ முதலீட்டாளர்களை சந்திக்க மறுக்கிறார். அமைச்சர்களோ லஞ்சத்திற்கு மேல் லஞ்சம் கேட்டு முதலீட்டாளர்களை விரட்டியடிக்கிறார்கள். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட முதலீட்டாளர்களால் தான் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகள் குவிகின்றன.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருக்கும் வரை ஊழல் ஒழியாது; ஊழல் ஒழியாத வரை தொழில் முதலீடுகளும், வேலைவாய்ப்பும் பெருகாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஒருவேளை, மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தவறு என ஜெயலலிதா கூறுவாறேயானால், கடந்த 5 ஆண்டுகளில் குவிந்த முதலீடுகள், அதைக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றில் வேலை பெற்ற பணியாளர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, அவரது அறிவிப்பின் உண்மைத் தன்மையை தமிழக மக்கள் முன்னிலையில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x