Last Updated : 12 Jan, 2017 10:31 AM

 

Published : 12 Jan 2017 10:31 AM
Last Updated : 12 Jan 2017 10:31 AM

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருமா?- ஜல்லிக்கட்டுக்காக 11 ஆண்டுகளாக நடைபெறும் சட்டப்போராட்டம்

ஜல்லிக்கட்டுக்காக 11 ஆண்டுகளாக நடை பெற்று வரும் சட்டப் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடிக்கும் நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவு கிறது.

பொங்கலை ஒட்டி நடத்தப் படும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்திபெற்றது. உச்ச நீதிமன்ற தடை காரணமாக இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை. இந்தா ண்டு ஜல்லிக் கட்டு நடைபெறும் என நினைத்து அலங்கா நல்லூரில் வாடிவாசல் அழகுபடுத்தப்பட்டு காளைகளை வரவேற்க காத்திருக்கிறது. பாரம்பரியமாக நடை பெற்று வந்த ஜல்லிக் கட்டுக்கு முதல் இடையூறு 2006-ம் ஆண்டில் வந்தது. அதுவும் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரையில தான். ஜல்லிக்கட்டில் காளை முட்டி இறந்தவரின் தந்தை ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி 2006-ல் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜல்லிக்கட்டுக்கு தடை

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி ஆர்.பானுமதி (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி) ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகங்கள் வதை செய்யப்படுவதாக தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை 2007 மார்ச்சில் விசாரித்த நீதிபதிகள் எலிப்தர்மாராவ், ஜனார்த்தனராஜா அமர்வு, காளைகளுக்கு போதை வஸ்துகள் வழங்கக்கூடாது, மாடுபிடி வீரர்கள் மது குடித்திருக்கக்கூடாது, மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் உள்பட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தை பிராணிகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. உச்ச நீதிமன்ற அமர்வு நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு 2007 ஜூலையில் தடை விதித்தது. பின்னர் தமிழக அரசின் சீராய்வு மனுவை ஏற்று 2008-ல் பொங்கலின் போது ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஒழுங்குமுறை சட்டம்

இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இவ்வாறு இருக்கும் போது பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டு, காட்சிப்படுத்தப்பட முடியாத விலங்குகள் பட்டியலில் காளையை 2011 ஜூலையில் சேர்த்து உத்தரவிட்டார் அப்போதைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இதனால் ஜல்லிக்கட்டுக்காக மீண்டும் போராடும் நிலை உருவானது. இருந்தபோதிலும் 2012-ல் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அமர்வு அனுமதி வழங்கியது. 2012-ல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதற்கிடையே பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதோடு விடாமல் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு நிரந்தரமாக தடை விதித்தும் 2014 மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜன. 8-ல் நீக்கியது. அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஜல்லிக்கட்டு வழக்குகளில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறியதாவது:

நாடாளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில், அவசரம் கருதி மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவசர சட்டம் இயற்றுவதற்கு அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்பட வேண்டிய ஒன்று என்ற அவசரம் கருதி மத்திய அமைச்சரவை அவசர சட்டம் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று வெளியிடலாம்.

அல்லது 1960-ம் ஆண்டு விலங் குகள் வதைச் சட்டத்தில் உள்ள காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்து சட்டம் இயற்றலாம். அந்தச் சட்டத்தின் பிரிவு 11 (3)-ல் காளைகளை ஆண்மையிழக்கச் செய்தல், கொம்புகளை நீக்குதல் போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்கலாம். அவசர சட்டம் கொண்டு வருவதாக இருந்தால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணங்களை ஆய்வுசெய்து, அந்த காரணங்களுக்கு விரோதமாக இல்லாமல் காளைகளை பாதுகாக்கவும், மாடுபிடி வீரர்களை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளை கட்டாயமாக்கி உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் இந்த பொங்கலில் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x