Published : 18 Aug 2016 07:43 AM
Last Updated : 18 Aug 2016 07:43 AM

எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்க விவகாரம்: திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் - வடசென்னை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய் யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடை பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் நேற்று அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப் பட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா அர.சக்கரபாணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பங் கேற்றனர். ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களிடம் மு.க.ஸ்டா லின் கூறியதாவது:

திமுக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு எங்களை வெளியேற்றியுள்ளனர். யாருடைய பெயரையும் குறிப்பிட்டு எச் சரிக்கை செய்யாமல் ஒட்டுமொத்த மாக திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்திருப்பது திட்டமிட்ட சதியாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினோம். அதன்படி திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ‘சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்.

வட சென்னையில்..

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் 22-ம் தேதி மாலை கருணாநிதி தலைமையில் வட சென்னை பகுதியில் தங்கச்சாலையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். இன்று பேரவைக்கு வருகை தராத திமுக எம்.எல்.ஏ.க்கள் அவை நிகழ்வுகளில் பங்கேற்பார்களா என்பது குறித்து நாளை (இன்று) தெரியும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதி பங்கேற்பாரா?

சட்டப்பேரவை கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு ஸ்டாலின் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்களில் பலர் சட்டப்பேரவை முற்றுகை, தமிழகம் முழுவதும் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், முதல் கட்டமாக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x