Published : 17 Mar 2017 09:24 AM
Last Updated : 17 Mar 2017 09:24 AM

தமிழக பட்ஜெட் 2017 - 18: நகர்ப்புற மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.126 கோடி

நகர்ப்புற மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.126 கோடி

தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்புத் திட்டத்துக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறப் பகுதிகளில் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மருத்துவ வசதிகளை மேம்படுத்த 2016-17-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் கடனுதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்புத் திட்டத்தை ரூ.1,634 கோடி செலவில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்துக்கு என்று ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10 இடங்களில் ஜெனரிக் மருந்து விற்பனை கடைகள்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் 10 ஜெனரிக் மருந்து விற்பனை கடைகள் அமைக்கப்படும்.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை இந்த அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இது தவிர, குறைந்த விலையில் முக்கிய மருந்துகள் கிடைக்கும் வகையில், வணிகக் குறியீடு இல்லாத பொது மருந்துகளின் (Generic) பயன்பாடு ஊக்குவிக்கப்படும். வணிகக் குறியீடு இல்லாத பொது மருந்துகளை விற்பனை செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் 10 விற்பனையகங்கள் அமைக்கப்படும். இதைத் தொடர்ந்து இத்தகைய வணிகக் குறியீடு இல்லாத பொது மருந்துகளின் விற்பனைக் கடைகள் நகரின் முக்கிய இடங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் கூட்டுறவு நிறுவனங்களால் அமைக்கப்படும். இந்த முயற்சி, மருந்து மற்றும் மருந்துப் பொருட்களுக்கான மக்களின் செலவு சுமையை வெகுவாகக் குறைக்க உதவும்.

புதிதாக 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ் ரூ.43.76 கோடி செலவில் புதிதாக 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில் ரூ.43.76 கோடி செலவில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும். 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.15.09 கோடி செலவில் 96 பல்நோக்கு சிகிச்சை மையங்களை இந்த அரசு அமைக்கும்.

சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி

சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், நகர்ப்புற மருத்துவக் கட்டமைப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நினைவு மகப்பேறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 2017-18-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.1,001 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் சிசு இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைக்க உதவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், 2016-17-ம் ஆண்டில் 5.81 லட்சம் கர்ப்பிணிகள் ரூ.551.61 கோடி நிதியுதவி பெற்று பயனடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு என்று ரூ.1,001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின்கள் வழங்க மதிப்பீடுகளில் ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x