Published : 19 Mar 2017 11:29 AM
Last Updated : 19 Mar 2017 11:29 AM

தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவில்லை என மக்கள் ஆத்திரம்: தருமபுரியில் அமைச்சர் அன்பழகன் முற்றுகை

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உயர்கல்வித் துறை அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருப்பவர் கே.பி.அன்பழகன். இவர், நேற்று காலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்துவைக்க சென்றார்.

இந்நிலையில், பாலக்கோடு பேரூராட்சியின் 9 மற்றும் 10-வது வார்டு மக்கள் திரண்டு வந்து அமைச்சரின் காரை முற்றுகையிட்ட னர். “தொடர்ந்து 4 முறை பாலக் கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும் தொகுதி மக்களின் பல பிரச்சினைகளை தீர்க்கவில்லை. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை. தொகுதி மக்களின் தேவைகளையும், சிரமங் களையும் அறிந்து அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பாலக்கோடு நக ருக்கு இனி வரவேண்டாம்” என அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு அமைச்சர், “சிலரின் தூண்டுதலின்பேரில் செயல்பட வேண்டாம். பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டுவந்தால் அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸாரும், அதிகாரிகளும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து உளவுப்பிரிவு போலீ ஸார் கூறும்போது, “சசிகலா தரப்புக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆதரவாக இருக்கும் நிலையில், பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார். இதனால், அதிருப்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, உள்ளூர் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதுபோல் செயல்பட்டு முற்றுகையிட்டுள்ள னர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x