Published : 17 Aug 2016 08:48 AM
Last Updated : 17 Aug 2016 08:48 AM

பெருங்களத்தூரில் வேன்-ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேர் காயம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

பெருங்களத்தூரில் வேன்-ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்தன.

சென்னை கிண்டி-ஈக்காடுதாங் கலில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை அச்சரப் பாக்கம் பகுதியில் இருந்து ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று, நேற்று அதிகாலை கிண்டி நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் வந்தது. அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி(20) என்பவர் வேனை ஓட்டினார்.

அப்போது பேராவூரணியில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று, முன்னால் சென்ற வேன் மீது வேகமாக மோதியது. இதனால், முன்னால் சென்ற அரசு விரைவு பேருந்து மீது வேன் மோதியது. இந்த விபத்தில் 2 பேருந்துகளுக்கும் நடுவில் வேன் சிக்கி கொண்டது. வேனில் வந்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர்.

இவர்களில், அச்சரப்பாக்கம் பெரிய அயப்பாக்கத்தைச் சேர்ந்த அனுபிரியா(20), சித்ரா(21), கவுரி(19), கவிதா(20) ஆகியோர் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 நாள் தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு சென்னைக்குத் திரும்பி கொண்டிருந்தவர்கள் இதனால் அவதிப்பட்டனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆம்னி பஸ் ஓட்டுநர் திருவாரூரைச் சேர்ந்த விமல்குமாரை(33) கைது செய்தனர்.

ரயில் மோதி டெய்லர் பலி

தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (42). டெய்லர். நேற்று காலை தாம்பரம் அருகே இரும்புலியூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு அதே இடத்திலேயே உயிழந்தார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதியவர் பலி

திருவிடந்தை பகுதியில் நடந்து சென்ற முதியவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

திருவிடந்தை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர் இதே பகுதியில் உள்ள நித்தியபெருமாள் கோயில் அருகே நடந்து செல்லும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு இவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x