Published : 13 Sep 2016 01:02 PM
Last Updated : 13 Sep 2016 01:02 PM

உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக: 16 முதல் விருப்ப மனுக்கள் விநியோகம்- மனுக்களை பெற நிர்வாகிகளை நியமித்தார் ஜெயலலிதா

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை அதிமுக அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து 16-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வழக்கம்போல மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அதிமுக அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. தேர்தலில் போட்டியிட விரும்பு வோருக்கான விருப்ப மனுக்கள் 16-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி யின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். வரும் 22-ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

சென்னை மாநகராட்சி கவுன் சிலர் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கட்சித் தலைமை அலுவல கத்தில் வழங்கப்படும். கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மற்ற மாவட்டங்களுக்கான விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வழங்கப்படும். இப்படிவங்களை பெற மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

தேனி மாவட்டம் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு - ஆர்.வைத்திலிங்கம் எம்பி, துரை கோவிந்தராஜன், சேலம் புறநகர் - அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சதன் என்.பிரபாகர், கன்னியாகுமரி - அ.தமிழ்மகன் உசேன், ஏ.விஜயகுமார் எம்பி, கரூர் - மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோவை மாநகர் - சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பிஆர்.ஜி.அருண்குமார், நாமக்கல் - அமைச்சர் பி.தங்கமணி, எஸ்.ராஜூ.

கோவை புறநகர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சோலை இரா.கண்ணன், சேலம் மாநகர் - செ.செம்மலை, ஜி.வெங்கடாசலம், தென் சென்னை வடக்கு - என்.தளவாய் சுந்தரம், வி.பி.கலைராஜன், தென் சென்னை மேற்கு - பா.வளர்மதி, விருகை வி.என்.ரவி, வடசென்னை தெற்கு - வி.எஸ்.சேதுராமன், நா.பாலகங்கா, வட சென்னை வடக்கு - அமைச்சர் டி.ஜெயக்குமார், பி.வெற்றிவேல் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு கட்சி ரீதியான 50 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மனுக்களை பெற நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுகவில் விருப்ப மனுவிண்ணப்பக் கட்டணம் தொடர்பாக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் - ரூ.11 ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் - ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் - ரூ.2 ஆயிரம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் - ரூ.11 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள் - ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x