Published : 28 Oct 2015 09:42 AM
Last Updated : 28 Oct 2015 09:42 AM

தமிழகத்தின் கவி அடையாளம் அப்துல் ரகுமான்: பவள விழாவில் தலைவர்கள் புகழாரம்

தமிழகத்தின் கவி அடையாளம் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு புகழாராம் சூட்டினார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவளவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய விழாவில் அவரது மாணவர்கள், வாசகர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டிப் பேசினர்.

விழாவில், கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” ஆங்கில மற்றும் உருது மொழிபெயர்ப்பு நூலை கவிஞர் மு.மேத்தா, “கஸல் கவிதைகள்” உருது மொழிபெயர்ப்பு நூலை கவிஞர் மனுஷ்யபுத்திரன், “கவிக்கோ நேர்காணல்” குறுந்தகட்டை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.

தமிழறிஞர்கள் சார்பில் சாலமன் பாப்பையா, அவ்வை நடராஜன், இல.கணேசன், பேராசிரியர் ஆ.மார்க்ஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மதத்தலைவர்கள் சார்பில் சுகி.சிவம், சர்புதீன் மிஸ்பாகி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அரசியல் தலைவர்கள் சார்பாக திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தமாகா துணைத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:

கவிக்கோ அப்துல் ரகுமான், நாட்டின் ஒற்றுமைக்காகவும் சமய ஒற்றுமைக்காகவும் தனது கவிதைகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். தனது கவிதையை சாதாரண மக்களின் குரலாக வெளிப்படுத்தி வருகிறார். சமுதாயத்தில் நடக்கும் சாதி, மத பிரச்சினைகள் மற்றும் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை தனது கவிதைகளால் சாடியும் அம்பலப்படுத்தியும் வருகிறார். தமிழகத்தின் கவி அடையாளமாக அவர் திகழ்கிறார்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “அப்துல் ரகுமான் சமய ஒற்றுமைக்காக குரல் கொடுப்ப வர். தலித் மக்களின் முன்னேற்றத் தில் மிகுந்த அக்கறை கொண்டவர். வெறும் இயற்கையைப் பாடும் கவிஞராக மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகளைப் பற்றி கவிதை புனைந்தவர். அவருக்கென்று ஓர் அரசியல் பார்வை உண்டு. அதை எப்போதும் வெளிப்படுத்த தயங்காதவர்” என்றார்.

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பேசுகையில், “சிறுவயதில் இருந்தே கவிக்கோவின் கவிதை களைப் படித்து வளர்ந்தவள் நான். இன்றும்கூட எனது பேச்சுகளில் அவரது கவிதைகள் தவறாமல் இடம்பெறும். அதனால்தான் பிறையை வணங்கும் அவரை வாழ்த்த இந்த பிறைசூடனை வணங்குபவள் வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புகளை விவரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x