Published : 16 Feb 2017 07:59 AM
Last Updated : 16 Feb 2017 07:59 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் 4 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி சாதனை

நாட்டிலேயே முதன்முறையாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் 4 ஆயிரம் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் சார்பில் கிராமப்புற பகுதிகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.12 ஆயிரம் செலவில் கட்டப்படுகின்றன.

தனிநபர் கழிப்பறைகள்

இத்திட்டத்தின்படி 48 மணி நேரத்தில் 6 ஆயிரம் கழிப்பறைகளை கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் பிப்.13 அன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.நேற்று காலை 7 மணி வரையிலான 48 மணி நேரத்தில் 4 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டன. பணிக்கு வருவதாகக் கூறியிருந்த கொத்த னார்களில் பலர் வராததால், நிர்ண யிக்கப்பட்ட இலக்கை எட்ட இயல வில்லை என தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய அளவில் 48 மணி நேரத் தில், மிக அதிக எண்ணிக்கையில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 48 மணி நேரத்தில் 1,000 கழிப்பறைகள் கட்டியதுதான் இந்திய அளவிலான சாதனையாக இருந்தது.

இப்பணிகளை கண்காணிக்க, ஊராட்சிக்கு தலா ஒரு தொடர்பு அலுவலர் வீதம் உதவி இயக்குநர் நிலையிலிருந்து ஊராட்சி செயலாளர் வரை அனைவரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இதுதவிர, செப்டிக் டேங்க் அமைக்க வசதியில்லாத பாறைகள் கொண்ட நிலப் பகுதி களில், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவியுடன் 100 சூழல் மேம்பாட்டு சுதாதாரக் கழிப்பறைகள் தலா ரூ.30 ஆயிரம் செலவில் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன. பாடாலூர், எசனை, எளம்பலூர் மற்றும் ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் தலா 25 வீதம் 100 சூழல் மேம்பாட்டு சுதாதாரக் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இக்கழிப்பறைகளை கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.12 ஆயிரம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் ரூ.18 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தூய்மை பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி கூறும்போது, “பெரம் பலூர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 68 ஆயிரத்து 435 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே 41 ஆயிரத்து 500 கழிப்பறைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. மார்ச் மாதத்துக்குள் பெரம்பலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் அமைத்துக் கொடுத்து திறந்தவெளிக் கழிப் பிடங்களே இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x