Published : 22 Feb 2017 09:24 AM
Last Updated : 22 Feb 2017 09:24 AM

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு எழுத முடியவில்லையே!- உலக தாய்மொழி தின பேரணியில் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

ஜெர்மனி, ஜப்பான், சீனா உள் ளிட்ட நாடுகளில் உள்ள நீதி மன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு எழுத முடியவில்லையே என சென்னையில் நடைபெற்ற உலக தாய்மொழி தின பேரணியில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை யுடன் கூறினார்.

உலக தாய்மொழி தினத்தை யொட்டி தமிழ்வழிக்கல்வி இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாப்பூர் மாங்கொல்லையில் இந்த பேரணியை நடிகர் சத்யராஜ் முன்னிலையில் முன்னாள் துணைவேந்தர் வீ.வசந்திதேவி தொடங்கி வைத்தார். கச்சேரி சாலை, லஸ் சர்ச் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்ற பேரணி மயிலாப்பூர் திருவள்ளூர் சிலையை வந்தடைந்தது. இந்த பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேர ணியை முடித்துவைத்து நிறை வுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தாய்மொழியில் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தித்தான் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் எத்தனை மொழிகள் வேண்டு மானாலும் படிக்கலாம். அது அவரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. எந்த மொழிக்கும் நாம் விரோதி அல்ல.

நான் பள்ளி இறுதிப் படிப்பு வரை தமிழ்வழியில்தான் படித் தேன். உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினேன். உயர் நீதிமன்றத்தில் என்னால் தமிழில் தீர்ப்பு எழுத முடிய வில்லை. ஜெர்மனி, ஜப்பான், சீனா என உலகின் அனைத்து நாடுகளிலும் நீதிமன்றங்களில் அந்தந்த நாடுகளில் தாய் மொழி களில்தான் தீர்ப்பு எழுதப்படு கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் தான் தீர்ப்பை எழுத வேண்டியுள்ளது.

ஒரு மொழியை தேவைப்படும் போது கற்றுக்கொள்ளலாம். ஆனால், தாய்மொழியில்தான் கல்வி பயில வேண்டும். நம்மால் சுத்தமாக தமிழில் பேச முடியவில்லையே. தமிழில் பேச வேண்டும். தமிழில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி அரிபரந் தாமன் கூறினார்.

முன்னதாக, பேரணியை தொடங்கிவைத்து முன்னாள் துணைவேந்தர் வீ.வசந்திதேவி பேசும்போது, “வளர்ந்த நாடு களில் எல்லாம் தாய்மொழி யில்தான் படிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில்தான் ஆங்கிலம் மோகம் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு மட் டுமே அனைத்து வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஆங்கிலத்தை தூக்கிப் பிடிக் கிறார்கள். நாம் ஆங்கிலத்தை வேண்டாம் என்று சொல்ல வில்லை. அது 2-வது மொழியாக இருக்கட்டும். கல்வியின் அனைத்து உரிமைகளும் மாநிலங்களிடம்தான் இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும் போது, “கணிதம், அறிவியல், புவியியல் உள்ளிட்ட பாடங் களை புரியாத ஆங்கில மொழியில் படித்து என்ன பயன்? தாய்மொழியில் படிக்கும்போது குழந்தைகளுக்கு அது எளிதாக இருக்கும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழி யில்தான் படிக்கிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறும்போது, “பொதுவாக தலைவர்கள் பிறந்த தினம் உள் ளிட்ட முக்கிய நிகழ்வுகளில், சிறையில் நீண்ட காலம் தண் டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுவிப்பது வழக் கம். அந்த வகையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் உள் ளிட்ட தகுதியான கைதி களை விடுதலை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் அறிமுகவுரை ஆற்றினார். பேரணி முடிவில் பொதுப் பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஓவியர் வீரசந்தானம், ஆசிரியர்கள் ஜேம்ஸ், இறைபொற்கொடி, சுசிலா, ரேவதி உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x