Last Updated : 03 Jan, 2017 01:55 PM

 

Published : 03 Jan 2017 01:55 PM
Last Updated : 03 Jan 2017 01:55 PM

நொய்யல் இன்று 19: ஒரத்துப்பாளையம் அணையில் செத்து மிதந்த 10 லட்சம் மீன்கள்

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

18 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ‘சாயத்திரை’ நாவல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. திலகவதி உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் பலர், இந்த நாவலில் முன்வைக்கப்பட்டிருந்த சாயப்பட்டறைகள், அவற்றால் ஏற்படும் சூழல்கேடுகள் குறித்து விமர்சித்துப் பேசினர்.

இதில் சிறப்புரையாற்றிய ஜெயகாந்தனின் மாறுபட்ட சிந்தனையுடன்கூடிய உரைவீச்சு: சாயம் தீது. சாயம் கொடிது. சாயம் கூடாது. அதை ஒழித்தே தீர வேண்டும் என்று உரக்கவே சொல்கிறார்கள். அழுத்தமாக, அதற்கு எதிரீடாகவே சொல்கிறேன். சாயம் அவசியம். சாயம் தேவை. சாயம் மனிதகுல வளர்ச்சியின் மற்றொரு பரிணாமம். அது இல்லையெனில் நமக்கு இந்த நட்சத்திர விடுதி சுகம் கிடைக்குமா? இந்த நகரின் வியப்பூட்டும் வளர்ச்சி சாத்தியமா? ஆயத்த ஆடைகளை விதவித வண்ணத்தில் மனிதர்கள் அணிந்து அழகு காட்டிட முடியுமா? சாயம் நமக்கு கொடுத்த கொடைகள் இவை. சாயம் விஞ்ஞானம். சாயத்தால் தீது விளைந்தால், அது அடியோடு கூடாது என்று கூச்சலிடுவதில் என்ன நோக்கம் இருக்கிறது. சாயத்தின் தீமைகளை அகற்ற புதிய, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்; உருவாக்க வேண்டும். அடுத்தகட்ட பயணத்துக்கும் அதை அனுமதிக்க வேண்டும். அதுதானே அறிவுடமை?’’.

ஜெயகாந்தன் அன்று பேசியது இப்போது பலருக்குத் தெரியாது. ஆனால், அவர் பேசிய காலத்துக்கு முன்பும், பின்பும், அந்த சாயம் என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை திருப்பூர் மக்களும், சுற்றுவட்டார விவசாயிகளும், ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

சுத்திகரிப்பு நிலையங்கள்

எனவேதான் ‘சாயம் தீது; கொடிது’ என்று ஒருபக்கம் கோஷம் எழுந்தாலும், இன்னமும் திருப்பூர்வாசிகள் சாய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தே இருக்கிறார்கள். சாய ஆலை உரிமையாளர்கலும் சாயக் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை வடிவமைத்து, ரூ.1,170 கோடிக்கு சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளனர். அதற்காக மத்திய, மாநில அரசுகளும் மானியத்தை அள்ளித் தந்துள்ளன.

ஆனால், மலடாகி நிற்கும் நொய்யலின் துயரம் இவற்றால் தீர்ந்துவிடவில்லை. அந்த துயரத்தை திருப்பூர் நொய்யல் கரையோரங்களில் இன்றும் காணமுடிகிறது. அந்த விஷயங்களை எளிதில் அறிய திருப்பூரையும், அதன் சாய வரலாறையும் ஓரளவாவது பின்னோக்கிப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

சோமனூர் முதல் திருப்பூர் மங்கலம் வரையுள்ள சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் ஏற்படுத்தாத பாதிப்பை, மங்கலம், ஆண்டிபாளையத்திலிருந்து தொடங்கும் சாய ஆலைகள் ஏற்படுத்திவிடுகின்றன.

நொய்யல் வரும் பாதையில் சுமார் 70-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மங்கலம். இங்கிருந்து ஊத்துக்குளி முதலிபாளையம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகளில்தான் ஆயிரக்கணக்கான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்துள்ளன.

இவை வெளியிடும் சாயக்கழிவு ஒரு காலத்தில் நொய்யலை நாசமாக்கியது. இப்போதோ ஆர்.ஓ. பிளான்ட்கள் வெளிப்படுத்தும் திடக்கழிவுகள் மூட்டை மூட்டையாய் நொய்யலாற்றின் கரையோரம் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன.

சாய ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரையோரம் இருப்பதால், அங்கு மலைபோல குவிக்கப்படும் திடக்கழிவுகள் மழைக் காலங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, மற்றொரு சூழல் பாதிப்பை நதிக்கு ஏற்படுத்துகின்றன.

இவை வெளிப்படுத்தும் சூழல் சீர்கேடு தண்ணீரில் மட்டுமல்ல; சுவாசிக்கும் காற்றிலும் கலந்து கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், சுவாசக்கோளாறு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

ஜீரோ பர்சன்ட் டிஸ்சார்ஜ்

ஆனால் சாயப்பட்டறை உரிமையாளர்களோ, “நாங்கள் ஜீரோ பர்சன்ட் டிஸ்சார்ஜ் (அமில, உப்புத் தன்மை இல்லாத சுத்தமான நீர்) அளவில் சாயநீரை சுத்திகரிக்கிறோம். மறுசுழற்சியில் கிடைக்கும் அந்த நீரை திரும்பவும் துணிக்கு சாயம் ஏற்றப் பயன்படுத்துகிறோம். ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட ஆற்றில் விடுவதில்லை. சுத்திகரிப்பில் கிடைக்கும் திடக்கழிவைக்கூட சாலைகளில் கொட்டுவதில்லை. எரிபொருளாகவும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு உபபொருளாகவும் அனுப்பிக்கொண்டிருக்கிறோம்” என்கின்றனர்.

ஆனால், விவசாயிகளோ, “ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு என்று சாயப்பட்டறை உரிமையாளற்கள் சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை. அதிகாரிகள் மற்றும் அரசு தரப்புக்கு கணக்குகாட்ட மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கான அரசு வழங்கும் மானியத்தில்கூட முறைகேடு நடக்கிறது. இரவு நேரங்களில் சாயநீரை ஆற்றில் கலந்து விடுகிறார்கள்” என்று புகார் தெரிவிக்கின்றனர்.

பதிலுக்கு சாயப்பட்டறை அதிபர்கள் “முறையாக அரசிடம் உரிமம் பெற்று சாய ஆலை நடத்துவோர் விதிகளை மீறுவதில்லை. உரிமம் பெறாமல் இயங்கும் ஆலைகளின் கழிவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்கிறார்கள். இந்த சர்ச்சை 30 ஆண்டுகளாகவே தொடர்கிறது.

கோவை மாவட்டத்தில் செம்மாண்டம்பாளையம் அணை முதல் மங்கலம், ஆண்டிபாளையம், திருப்பூர், மண்ணரை, பள்ளபாளையம், முதலிபாளையம், அணைப்பாளையம் மற்றும் கத்தாங்கண்ணி அணைகள் மற்றும் அவை சார்ந்த குளங்கள் மூலமாக 1990-ம் ஆண்டுக்கு முன் வரை நொய்யல் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்றுள்ளன.

1980-ம் ஆண்டுக்கு முன் உள்ளூர் தேவைகளுக்கான உள்ளாடைகளை மட்டுமே தயாரித்த சிறிய நகரமாக இருந்தது திருப்பூர். சுதந்திரத்துக்கு முன் இங்கு 2 சாயப்பட்டறைகள் மட்டுமே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில ஜின்னிங் ஆலைகள், பஞ்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க சுற்றுப்புறக் கிராமங்கள் மொத்தமும் விவசாயத்தையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்தன.

அப்போது உள்நாட்டுத் தேவைக்கான உள்ளாடை உற்பத்தியில் சலவை, சாய ஏற்றும் பணிகள் அதிக தொழில்நுட்பத்துடனும், அமில, உப்பு அடர்வுச் செறிவுகள் கூடியதாகவும் இல்லை. இந்த நிலையில்தான் 1980-களுக்குப் பின் உள்ளாடைகள் ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பனியன் முதலாளிகள் அடியெடுத்து வைத்தனர். அப்போதும் குறைந்த சாயப்பட்டறைகளே இயங்கின.

ஒரத்துப்பாளையம் அணை

இதற்கிடையில், திருப்பூருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரத்துப்பாளையத்தில் ஓர் அணையும், அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சின்னமுத்தூர் கிராமத்தில் ஓர் அணையும், அதற்கு 8 கிலோமீட்டர் தொலைவில் ஆத்துப்பாளையம் பகுதியில் ஓர் அணையும் கட்டத் திட்டமிட்டது தமிழக அரசு.

இந்த 3 அணைகளின் தொடர் சங்கிலி நீர்ப்பகிர்வு ஏற்பாட்டின் மூலம் 19,500 ஏக்கர் நேரடிப் பாசனப் பரப்புக்கான நிலங்களும் வரையறுக்கப்பட்டன.

ஆனால், இதைப் பற்றிக் கவலையில்லாமல் ஏற்றுமதி பனியன் வர்த்தகத்தில் பாய்ச்சலுடன் முன்னேறியது திருப்பூர். அப்போதே சில அரசியல் பிரமுகர்கள், சிந்தனையாளர்கள் “சாயக்கழிவு நொய்யலுக்கு ஆபத்து; அதை சுத்திகரித்தே ஆற்றில் விடவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். அரசும், பனியன் நிறுவன உரிமையாளர்களும் இதைப் பொருட்படுத்தாத நிலையில், 1984-ல் ரூ.9 கோடியாக இருந்தத பனியன் ஏற்றுமதி 1999-ல் ரூ.3,200 கோடியாக உயர்ந்தது.

இந்த இடைவெளியில்தான் ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர், ஆத்துப்பாளையம் அணைகளின் பணிகள் முடிந்து, 1992-ல் திறக்கப்பட்டன. தங்களுக்கு வரக்கூடிய விபரீதத்தை உணரமாலேயே, கரும்பு, நெல், மஞ்சளைப் பயிரிட்டனர் விவசாயிகள். 1994-95-ம் ஆண்டுகளில் அவை மெல்லக் கருகத் தொடங்கின. தென்ன மரங்கள் காய்ந்து, பட்டுப் போயின. தென்னங்குலைகள் சிறுத்துப்போயின. இளநீரும் அமிலமாகப் புளித்தது.

தொடக்கத்தில் இதை சகித்துக்கொண்ட விவசாயிகள், ஒருகட்டத்தில் சாயக்கழிவின் பாதிப்பை உணர்ந்தனர். கழிவுநீரால்தான் வேளாண் நிலங்கள் பாழாகியதை அறிந்தனர்.

இதையடுத்து, திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு எதிராக, ‘சாயக் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது. நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

அந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, 1997-ல் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்த, சுமார் 10 லட்சம் மீன்கள் இறந்து மிதந்தன. அவற்றை லாரிகளில் எடுத்துச்சென்று அப்புறப்படுத்த மாதக்கணக்கில் பிடித்தது அதிகாரிகளுக்கு.

அணையைத் திறக்க எதிர்ப்பு

மீன்கள் இறந்து மிதந்ததையடுத்து அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வேகமெடுத்தது. அணையின் மேல்பகுதி விவசாயிகள் “அணையில் தேங்கிய நீர் எங்கள் நிலத்தை பாழ்படுத்திவிட்டது. உடனே அதைத் திறந்துவிட வேண்டும்” என்றனர். ஆனால், அணையின் கீழ்ப்பகுதி விவசாயிகளோ “அணையில் நீரைத் திறக்கக் கூடாது” என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

“அணை நீரை திறந்துவிடக் கூடாது, நொய்யலில் மாசு ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் செய்வதறியாது திகைத்தது மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும்.

1999-ல் நேரிட்ட இந்த விவகாரத்தால் “ரூ.3,200 கோடி அந்நியச் செலாவணி பாதிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதை எப்படி சமாளிப்பது?” என்ற மிகப் பெரிய கவலை அப்போதைய அரசுக்கு ஏற்பட்டது.

- பயணிக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x