Published : 06 Jun 2017 11:24 AM
Last Updated : 06 Jun 2017 11:24 AM

ஆளுநர் கிரண்பேடியை மாற்றாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம்: சட்டப்பேரவையில் தீர்மானத்துக்கு வலியுறுத்திய அதிமுக, காங்கிரஸ்

ஆளுநர் கிரண்பேடியை மாற்றாவிட்டால் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு என்ற தீர்மானம் கொண்டு வர அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதில் முடிவு எடுக்க திமுகவும் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தொடர்பாக கடும் விவாதம் நடந்தது.

அன்பழகன் (அதிமுக):

ஆளுநர் செயல்பாட்டாலும், பொய் தகவலாலும் எம்எல்ஏக்கள் மனரீதியாக பாதிக்கப் பட்டுள் ளோம். எம்எல்ஏக்களை அவமதிக்கும் செயலைத்தான் ஆளுநர் செய்கிறார். அதிகாரத்தை ரத்து செய்யவேண்டும். ஆளுநரை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று தீர்மானம் கொண்டு வரவேண்டும். ஆக்கப்பூர்வ செயல் வரவேண்டும். அதிமுக இவ்விஷயத்தில் துணை நிற்கும்.

அமைச்சர் கமலக்கண்ணன்:

ஆளுநரை மாற்றாவிட்டால் அனைத்து எம்எல்ஏக்களும் ஜனாதிபதி தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று அவையை ஒத்தி வைத்து முடிவு எடுக்க வேண்டும்.

சிவா (திமுக) :

ஆளுநர் செயல்பாடு தொடர்பாக முடிவு எடுக்க இவ்விஷயத்தில் சட்டப் பேரவையை ஒத்தி வைத்து விட்டு பேசி முடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சர் கந்தசாமி:

ஆளுநர் மாளிகை என்பதை பாஜக ஆபிஸ் என மாற்றுங்கள்.

ஜெயமூர்த்தி (காங்கிரஸ்) :

தீர்மானம் போட என்ன தடை? ஏன் போடக்கூடாது?

ஜெயபால் (என்.ஆர்.காங்கிரஸ்):

இதை ஏற்கிறேன். அதே நேரத்தில் செய்ய வேண்டிய வேலை சரியான நேரத்தில் அரசு செய்யாததால்தான் மக்கள் ஆளுநரை நாடுகிறார்கள்.

உறுப்பினர் இவ்வாறு பேசியதும் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர் வைத்திலிங்கம்:

அரசு தீர்மானத்தை முடிவு செய்யும்.

அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்):

மருத்துவக்கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை ஒழித்துக் கட்டிய அரசு இது. அரசின் 12 முறைகேடுகளை சொல்லத் தயாராக சொல்கிறேன்.

அமைச்சர் கந்தசாமி :

சிபிஐ வழக்கில் உள்ள நீங்கள் (அசோக் ஆனந்து) அரசை குறைக்கூற உரிமையில்லை. ஊழல் தொடர்பாக பேச அருகதை இல்லை. நீங்களும், உங்கள் தந்தையும் சிபிஐ வழக்கில் உள்ளீர்கள்.

முதல்வர் நாராயணசாமி:

ஐந்து ஆண்டுகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் கடந்த ஆட்சியில் சம்பாதித்துள்ளனர். ஐம்பது கோடி லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை வைப்போம். மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் ஊழல் நடந்தது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்தான்.

சபாநாயகர் வைத்திலிங்கம்:

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் அரசு 50 சதவீத இடங்களை பெற்றது. முந்தைய அரசு முயற்சியே எடுக்கவில்லை. ஆளுநரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை யாராலும் மறுக்க முடியாது. மருத்துவ முதுநிலைப்படிப்பில் இடங்களை முதல்வர், அமைச்சர் பெற்று தந்துள்ளனர். மத்திய அரசு வழிகாட்டுதல் படி நிரப்பும் பணி நடக்கிறது. தவறு இருந்தால் எழுத்துப்பூர்வமாக தரலாம். அதேபோல் தீர்மானம் கொண்டு வரவும் எழுதித் தாருங்கள்.

என்.ஆர்.காங். ஒரு பகுதியினர் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரை மாற்றக்கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ்,திமுக,அதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பாக பேசி கொண்டிருந்தனர்.

என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோர் தெரிவித்த கருத்துகளில் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து அவையில் பேச விடாத அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி இருவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செல்வம்,கோபிகா,சுகுமாறன் ஆகியோர் வெளியேறவில்லை. அதேபோல் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி உட்பட 3 எம்எல்ஏக்கள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x