Last Updated : 23 Jun, 2016 12:16 PM

 

Published : 23 Jun 2016 12:16 PM
Last Updated : 23 Jun 2016 12:16 PM

முன்பே தெரிந்திருந்தால் கட்டையனை பிடிக்க விட்டிருக்க மாட்டோம்: ஒற்றை யானைக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

கஜ பூஜை நடத்த திட்டம்

‘நீ இந்தக் காட்டை விட்டுப் போவாய் என்று தான் நினைத்தோம். ஆனால் இந்த உலகத்தை விட்டு போவாய் என்று நினைக்கவில்லை’ என போஸ்டர்கள் ஒட்டி, இறந்த ஒற்றை யானைக்கு கோவை மதுக்கரை மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோவையில் உயிரிழந்த ஒற்றையானை ‘மகராஜ்’, மதுக்கரை வனப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. சுமார் 3 வருடங்களுக்கு மேலாக இங்குள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமான இந்த இளம் ஆண் யானை, மதுக்கரை சுற்றுவட்டார கிராமங்களையே தனது வாழ்விடமாக கொண்டிருந்தது. இந்த யானையை மதுக்கரை மக்கள் ‘கட்டையன்’ என செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக, அதைப் பிடிக்க அரசு உத்தரவிட்டது. அது பிடிபட்ட கடைசி நாளில், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு நின்று அதை வழியனுப்பி வைத்தனர். ஆனால், பிடித்து கொண்டு செல்லப்பட்ட இரண்டாவது நாளில், வரகளியாறு முகாமில் ‘மதுக்கரை மகராஜ்’ யானை உயிரிழந்தது. இந்த செய்தி, ஒட்டுமொத்த மதுக்கரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஒற்றை யானைக்கு மதுக்கரை கிராம மக்கள் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். யானையின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு இடங்களில், இறந்த யானையின் புகைப்படமிட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பின்னர் பொதுமக்கள் யானையின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மதுக்கரையைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறும்போது, ‘அந்த யானை எங்கிருந்து வந்தது எனத் தெரியாது, ஆனால் எங்களுடன் ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு நாளும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கடந்து போகும். விவசாய நிலத்தை பாழ்படுத்தியது, வன ஊழியரைக் கொன்றது என்பதைத் தவிர இந்த யானையின் மீது எந்த புகாரும் இல்லை. இங்குள்ள தர்மலிங்கேஸ்வரர் மலையடிவாரம் தான் அதன் இருப்பிடம். பாலக்காடு சாலை தான் வழித்தடம். எங்கள் ஊரின் அடையாளமாக இருந்த ஒரு ஜீவன் இன்று இல்லை. அதை நினைத்து இன்று அழாதவர்களே இல்லை. நல்ல முக லட்சணத்துடன், உயரம் குறைவாக இருந்ததால் அதை ‘கட்டையன்’ என்றும், மலையடிவாரத்தில் தங்கிருந்ததால் ‘மலையப்பன்’ என்றும் செல்லமாக அழைத்து வந்தோம். அதன் பிறகே மகராஜ் என்ற பெயர் சூட்டப்பட்டது. முகாமுக்கு பிடித்து கொண்டு செல்கிறார்கள் என்பதாலேயே ஒத்துழைப்பு கொடுத்தோம். சிறைப்படுத்தினால் கட்டையன் இறந்துவிடுவான் என முன்பே தெரிந்திருந்தால் நிச்சயமாக பிடித்துச் செல்ல விட்டிருக்க மாட்டோம். கட்டையன் கும்கியாக மாறி, மீண்டும் மதுக்கரைக்கு வருவான் என எதிர்பார்ப்புடன் இருந்தோம்; ஆனால் நடக்கவில்லை. விரைவில் கட்டையனுக்கு கஜபூஜை நடத்த உள்ளோம்’ என்றார்.

மீண்டும் காட்டு யானை

கோவை மதுக்கரை ராணுவ குடியிருப்புப் பகுதிக்குள் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று ஊடுருவியுள்ளது.

அங்கு சுற்றித் திரிந்த அந்த யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

வரகளியாறு வனத்துறை முகாமில் யானைக்கு நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதில், யானையின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கால்நடை மருத்துவர் திருக்குமரன் தலைமையில், சித்திக், சரவணக்குமார், கோவிந்தராஜ் என 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். இதில், யானையின் உடலில் இருந்து முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இருதயம், கல்லீரல், மூளை, நுரையீரல் ஆகியன பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. சென்னையில் உள்ள கால்நடைத் துறை கல்லூரியின் மருத்துவ ஆய்வுக் கூடத்துக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 3 அடி நீளமுள்ள தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. முகாமின் ஒரு பகுதியில் 8 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, வனத்துறையினரின் மரியாதையுடன் மதுக்கரை மகராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முதல்கட்ட ஆய்வில், கூண்டில் முட்டி மோதியதில் யானையின் தலை எலும்பு உடைந்து, ரத்தம் உறைந்திருப்பதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவில் முழு விவரம் தெரியவரும்.

கடைசி உணவு

தொடர்ந்து, சரியாக உணவு எடுத்துக்கொள்ள மகராஜ் மறுத்துள்ளது. நேற்று முன்தினம் காலை, அதன் பாகன், கையில் தேங்காயுடன் யானையின் முன் நின்று நீண்ட நேரம் உணவு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். ஆனால், யானை மவுனம் காத்துள்ளது. பின்னர், தரையில் விழுந்து கை கூப்பி வேண்டிக்கொண்டார். அதன்பின்னர், நீண்ட நேரம் கழித்து பாகனின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து, உடைத்த தேங்காயை மகராஜ் உண்டுள்ளது. வேறு எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. இதனால், பாகன் நிம்மதியடைந்தார். இந்த சம்பவம், அங்கிருந்தவர்களை உருக வைத்தது. நேற்று நடந்த பிரேதப் பரிசோதனையில், யானையின் வயிற்றில் தேங்காயின் மீதங்கள் இருந்ததை மருத்துவர்களும் உறுதிசெய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x