Published : 31 Aug 2016 03:27 PM
Last Updated : 31 Aug 2016 03:27 PM

அனைத்து மாவட்டங்களிலும் இனி நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை: ஜெயலலிதா அறிவிப்பு

நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை திட்டம் 27 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கு எனது தலைமையிலான அரசால் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில், 830 புதிய கால்நடை மருந்தகங்கள், 200 கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,615 புதிய கால்நடை மருத்துவ நிலையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 1,163 கால்நடை மருத்துவ நிலையக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தமான பின் வரும் புதிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

1. ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் நகரும் கால்நடை மருத்துவ அலகுகள் வழக்கமான கால்நடை மருத்துவ சேவைகளை மட்டுமே விவசாயிகளின் இருப்பிடங்களில் வழங்கி வருகின்றன. சில நேரங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும். அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டால் அவை காப்பாற்றப்படும். எனவே தான், 2015-16-ஆம் ஆண்டு நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை திட்டம் 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், மேலும் 27 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டம் ரூ.37 கோடியே 88 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை அவசர ஊர்தி உள்ள நிலை எய்தப்படும்.

2. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது இன்றியமையாததாகும். ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் அடைப்பான் நோய் தடுப்பூசி ஆய்வகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆய்வகம் நல் உற்பத்தி தரத்திற்கு உயர்த்தப்படும், இப்பணிகள் ரூ.36 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3. சிறந்த கால்நடை மருத்துவ சேவையினை வழங்குவதற்கு உகந்த கட்டமைப்பு வசதி அவசியமாகும். எனவே தான், எனது தலைமையிலான அரசு சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு 113 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் என 115 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.28 கோடியே 92 லட்சம் செலவில் கட்டப்படும்.

4. கால்நடைகளின் உற்பத்தியும் உற்பத்தித் திறனும் தீவனத்தினை மையமாகக் கொண்டே அமைகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.181 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், 1.62 லட்சம் ஏக்கர் நிலங்கள் பசுந்தீவன சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தரமான பசுந்தீவனம் கிடைத்திட ஏதுவாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் தீவன விதை உற்பத்தி அலகு, செட்டிநாடு, நடுவூர் மற்றும் ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணைகளில் தீவன கட்டி உருவாக்கும் அலகுகள் ரூ.3 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தற்போது என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் வாயிலாக கால்நடைகள் உடனடி சிகிச்சை பெறவும், உட்கட்டமைப்பு மேம்படவும் மற்றும் தீவன அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x