Published : 08 Mar 2017 08:52 PM
Last Updated : 08 Mar 2017 08:52 PM

ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்: ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முடிவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

''ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றத்தான் இந்த தர்மயுத்தம். ஜெயலலிதா மரணமடைந்த நாளில், மாலை 4.30 மணிக்கே இறந்ததாக, வீட்டில் இருந்த எனக்கு 6.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

நான் மருத்துவமனை சென்று கேட்ட போது, உறுதி செய்யப்படவில்லை என கூறி, நேரம் கடத்தி 11.30 மணிக்கு காலமாகிவிட்டதாக தெரிவித்தனர். தற்போது, சுகாதாரத்துறை செயலர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பான செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், எந்த செய்தியும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை செயலாளர் வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

அதே போல் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது போல், என்னிடம் விசாரணை நடத்தினால், நான் என்ன நடந்தது என்பதை சொல்கிறேன். உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான். கடந்த 2011-ல், சசிகலா உள்ளிட்டவர்களை நீக்கிவிட்டு, மீண்டும் 2012-ல் சசிகலாவை மட்டும் சேர்த்தார். அப்போது சசிகலாவுடனோ, அவரது குடும்பத்தினருடனோ, யாரும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டார். அன்றிலிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை.

மருத்துமனையில் 24-வது நாளில், வெளியில் வரும்போது என்னை சசிகலாபார்த்து, 'ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்’ என்றார். இது தான் நடந்தது. மன்னிப்பு கடிதத்தில் சசிகலா கூறிய சதித்திட்டம் தற்போது முழுமையாக நிறைவேறியுள்ளது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் தான் இந்த தர்மயுத்தம் நடக்கிறது'' என்று ஓபிஎஸ் பேசினார்.

இறுதியாக ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x