Published : 21 Feb 2017 09:56 AM
Last Updated : 21 Feb 2017 09:56 AM

அப்துல் கலாம் விருப்பத்தின்படி மரம் நட வேண்டி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்: ராமேசுவரம் வரை சென்ற இளைஞரின் முயற்சி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் எண்ணங்கள் நிறைவேற வேண்டி, இளைஞர் ஒருவர் சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு 520 கிமீ தூரம் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் பிரியா நகரைச் சேர்ந்தவர் பொன்முருகன் (24). தனியார் நிறுவன ஊழியர். முன்னாள் குடியர சுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அவரது ஆசைப்படி, மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். தனது வீட்டிலிருந்து ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடம் நோக்கி சுமார் 520 கிமீ பயணம் மேற்கொண்டார்.

செல்லும் வழியில், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும், மரம் வளர்க்கவும் வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார். கலாமின் நினைவிடத் தில் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது சகோதரர் வீட்டுக்குச் சென்று புத்தகம் பரிசு வழங்கி, அவரிடம் ஆசி பெற்றார்.

இதுகுறித்த அனுபவத்தை ‘தி இந்து'விடம் பகிர்ந்தபோது அவர் கூறியதாவது: சாலை விரிவாக்கம், நகர வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. சமீபத்தில் வார்தா புயலினால் சென்னை, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களில் பல ஆயிரம் மரங்கள் சேதமடைந்தன. மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெரியளவில் இல்லை; காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்களால், மண்ணின் தன்மை மலடாக மாறி வருகிறது.

மரங்களை வளர்க்க அப்துல் கலாம் தொடர்ந்து அறிவுறுத்தினார். அவரது எண்ணத்தை நிறைவேற்ற என்னால் ஆன சிறு முயற்சியை மேற்கொள்ள இந்த பயணத்தை தொடங்கி நிறைவு செய்தேன்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். எனது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர், பல வகையில் உதவிகள் செய்தனர். அப்துல் கலாம் எண்ணம் போல் பசுமை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் மைதானங்களிலும் பூங்காக்களிலும் மரங்களை வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பு குறித்த எனது விழிப்புணர்வு பயணம், நிறைவு பெறவில்லை, தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x