Published : 02 Mar 2014 03:30 PM
Last Updated : 02 Mar 2014 03:30 PM

பள்ளித் தேர்வுகள்: அரசியல் கட்சிகளுக்கு வைகோ கோரிக்கை

பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எழுதும் மாணவர்களின் நலன் கருதி, ஒலிப்பெருக்கி இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 அன்றும் தொடங்குகின்றன.

பல இலட்சம் மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர். மாணவக் கணிமணிகளை அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இத்தேர்வுகள் விளங்குகின்றன.

மாணவர்கள் தங்கள் பள்ளி வகுப்பறைகளில், பள்ளி அரங்குகளில் மாதாந்திர, மாதிரி தேர்வுகளை எழுதியதைப் போலவே அச்சமோ, பதற்றமோ இன்றி எழுதிட வேண்டும். மாணவச் செல்வங்களின் அறிவுத்திறனையும்; ஆற்றலையும் முழுமையாக வெளிக் கொணரும் கருவி அல்ல தேர்வுகள். ஆனாலும், அவர்களின் பயிலும் திறனை ஓரளவு வெளிப்படுத்துகின்ற வாய்ப்பாகவே தேர்வைக் கருத வேண்டும்.

எனவே புரிந்து படித்து இயல்பான நிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக எழுதி வெற்றிபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளை மாணவச் செல்வங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கல்வியாளர்களின் வேண்டுகோளையும், விருப்பத்தையும் கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கு உதவிடும் வகையில், பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களிலும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற அமைப்பினரோ சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடும் முறையை முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x