Published : 13 Jun 2016 08:42 AM
Last Updated : 13 Jun 2016 08:42 AM

ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்

ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.

இந்த நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 36 ஆயிரத்து 566 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து 650 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவருக்கு 73-வது இடம் கிடைத்திருக்கிறது.

சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி உள்பட 23 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பிடெக் படிப்புகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்து 575 இடங்கள் உள்ளன. தற்போது அட்வான்ஸ்டு தேர்வில் 36 ஆயிரத்து 566 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களில் தரவரிசையில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும். தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்த மாணவர் ராகுல் சென்னை ஐஐடி-யில் பிடெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர விரும்புவதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x