Published : 23 Apr 2017 09:03 AM
Last Updated : 23 Apr 2017 09:03 AM

நடிகை ராணி பத்மினி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற காவலாளியை விடுவிக்க மனைவி ஆட்கொணர்வு மனு: உள்துறை செயலர் பதில் அளிக்க உத்தரவு

நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலாளியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் ‘வில்லியனூர் மாதா’, ‘நிரபராதி’ உள்ளிட்ட திரைப்படங்கள், மலையாளம், தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராணி பத்மினி. இவர் சென்னை அண்ணா நகரில் தாய் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 1986-ல் கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த கார் ஓட்டுநர் ஜெபராஜ், காவலாளி லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகியோர் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 1989-ல் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், ஓட்டுநர் ஜெபராஜுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், மற்ற இருவரையும் விடுவித்தும் உயர் நீதிமன்றம் 1990-ல் உத்தரவிட்டது.

இருவர் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலையில் காவலாளி லட்சுமி நரசிம்மனுக்கும் பங்கு இருப்பதால், செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதான் என்று கருத்து தெரிவித்து, ஓட்டுநர் ஜெபராஜுக்கு வழங்கப் பட்டதுபோலவே, தூக்கு தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2001-ல் உத்தரவிட்டது. இதையடுத்து, லட்சுமி நரசிம்மன் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள லட்சுமி நரசிம்மன் தன்னை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, அவரது மனைவி எஸ்.எல்.மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் விசாரித்தனர். இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x