Published : 10 Jun 2016 12:14 PM
Last Updated : 10 Jun 2016 12:14 PM

தொழிற்பேட்டை, மாசுபடும் ஆறு, தாலுகா பிரிப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா வேடசந்தூர் இளம் எம்எல்ஏ?

திண்டுக்கல் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியாக உள்ள வேடசந்தூர் தொகுதி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் எம்எல்ஏ முயல வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தொகுதிக்கென தனியாக வாக்குறுதிகள் எதையும் தரவில்லை. கட்சித் தலைமை அறிவித்த தேர்தல் அறிக்கையையே பிரச்சாரமாக செய்தார். இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் எம்எல்ஏ தங்கள் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் விவசாயமும் முழுமையாக பலன் தராத பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள நூற்பாலைகள் மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். வேலைக்காக அருகிலுள்ள கரூர் மாவட்டத்துக்கு பலர் சென்றுவருகின்றனர். தொகுதி மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை உருவாக்க சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் தொகுதிக்குள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பதால் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதத்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று மாவட்டத்தின் பெரிய தாலுகாவாக உள்ள குஜிலியம்பாறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய தாலுகா உருவாக்கவேண்டும் என்பதுதான். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் தாலுகா அலுவலகப் பணிக்காக பல கிலோமீட்டர் பயணம் செய்து வேடசந்தூர் வரவேண்டியதுள்ளது. புதிய தாலுகா உருவாக்கினால் இது தவிர்க்கப்படும்.

மேலும் பிரதான பிரச்சினையாக இருப்பது வேடசந்தூர் நகர் மையப் பகுதியில் செல்லும் குடகனாறு. கொடைக்கானல் மலைப்பகுதியில் உருவாகி ஆத்தூர் நீர்த்தேக்கம் மூலம் திண்டுக்கல் மக்களுக்கு குடிநீரை அளித்துவிட்டு மீதமுள்ள நீர் ஆற்றில் ஓடிவருகிறது. திண்டுக்கல்லை கடக்கும்போதே தோல் கழிவுநீர் ஆற்றில் விடப்படுவதால் இந்த ஆறு மாசுபடுகிறது. இதையடுத்து வேடசந்தூர் நகருக்குள் நுழையும்போது ஆறு கழிவுநீர் கால்வாயாகத்தான் செல்கிறது. இதனால் நிலத்தடிநீர் மாசுபடுகிறது.

இந்த ஆறு மூலம் விவசாயம், குடிநீர் என செழித்த ஆற்றோரப் பகுதிகள்கூட தற்போது இந்த நீரை குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இந்த நீரைக் கொண்டு விவசாயமும் செய்ய முடியாதநிலை விரைவில் ஏற்பட்டுவிடும் சூழல் உள்ளது. ஆற்றைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது தொகுதி மக்களின் இன்றியமையாத கோரிக்கையாக உள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் அதிகளவில் இருந்தாலும் தொழிற்பேட்டை, தாலுகா பிரிப்பு, மாசுபடும் ஆறு ஆகிய 3 கோரிக்கைகளும் மிக முக்கியமானவையாக உள்ளன. முதல்கட்டமாக இவை குறித்து எம்எல்ஏ பரமசிவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறியதாவது: தொகுதிக்கு உடனடியாக என்ன தேவை என்பதை அறிந்துள்ளேன். மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x