Published : 02 Apr 2015 07:33 AM
Last Updated : 02 Apr 2015 07:33 AM

கேரளத்தில் படிப்படியாக மதுவிலக்கு: எல்லையோர டாஸ்மாக் கடைகளுக்கு மவுசு

மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிக்கும் கேரள அரசு, முதல் கட்டமாக 5 ஸ்டார் ஹோட்டல்களைத் தவிர்த்து 780 ஹோட்டல்களில் பார்களை மூடியது. அதை எதிர்த்து ஹோட்டல் அதிபர்கள் தொடர்ந்த வழக்ககிலும் அரசுக்கு ஆதரவான தீர்ப்பையே கேரள உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியது.

கேரள அரசே நடத்தும் அனைத்து மதுக் கடைகளும், தனியார் கள்ளுக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் புதிய மதுக் கொள்கையைத் தொடர்ந்து அரசு மதுபானக் கடைகளும், கள்ளுக் கடைகளும் மூடும் நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது. அப்படி கேரளாவில் மதுவிலக்கு தீவிரமானால் கேரளாவுக்கு பக்கத்திலுள்ள தமிழக எல்லையோர டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடி, விற்பனை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்ட போது, பழனியப்பன் என்பவர் கூறியதாவது: வாளையாறை ஒட்டியிருக்கிற புதுசேரி பஞ்சா யத்து பிளாக், கொழிஞ்சாம்பாறை, வடகரைப் பதி ஆகிய இடங்களில் அரசு மதுக் கடைகள் இருக்கு. அதேபோல் 2 கி.மீக்குள் 3 கள்ளுக் கடைகள் இருக்கு. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் பார்கள் மூடப்பட்டதால் கேரள அரசாங்கத்தோட மதுக் கடைகளில்தான் கூட்டம் கூடும். இது தவிர தமிழக டாஸ்மாக் மதுவை விட கேரள அரசாங்க மதுக் கடையில் விற்கும் மதுவின் விலை குறைவு. இங்கே கள் லிட்டர் ரூ.56- க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் கள்ளுக் கடைகளை தனியாருக்கு ஏலம் விடுவதில் அதிகாரிகளும் ஆளுங்கட்சியி னரும் பெரும் பணம் பார்க் கிறார்கள். அதனால் கள்ளுக் கடை மட்டுமல்ல; அரசாங்கம் நடத்தும் பீர், ஒயின் விற்பனையாகும் மதுக் கடைகளைக் கூட கேரள அரசு மூடுவதற்கு வாய்ப்பே இல்லை!’ என்றார்.

வாளையாறு பகுதியில் மேலும் சிலர் கூறும்போது, ‘ஆலப்பி, பாலக்காடு, சித்தூர் பகுதியில் கள் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவைக்குப் போதுமானதாக இல்லை. எனவே அரசு மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கேரளத்தை ஒட்டிய தமிழக எல்லையோர கிராமங்களில் சில தோப்புகளில் கள் கிடைக்கிறது. விலையும் குறைவு. எனவே தமிழ்நாட்டில் கள்ளுக் கடை திறந்தால் மட்டும்தான் கேரள கள்ளுக் கடைகளுக்கு பாதிப்பு வரும்!’ என்றனர்.

தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவரும் ’கள் இயக்கம்’ நல்லசாமி கூறிய தாவது: ‘கேரள அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. கள்ளுவை கேரளாவில் மதுவாக கருதாமல், உணவுப் பொருளாகவே நினைக்கிறார்கள். கேரளத்தில் மட்டுமல்ல; ஜப்பானின் சாக்கே, சைனாவின் மவுதாயி, கோவாவின் பென்னி, ரஷ்யாவின் வோட்கா, ஸ்காட்லாந்து விஸ்கி எல்லாமே அவரவர்களின் நாட்டில் விளையும் தானியங்கள், பழவகைகளைக் கொண்டு அவர்கள் நாட்டிலேயே தயாரிப்பதாகும். அதற்கு தடையும் இல்லை. அவை உடம்புக்குக் கேடும் தருவது இல்லை. நம் தமிழகத்தில் மட்டும்தான் அயல்நாட்டு மதுவகையை சர்க்கரை ஆலைகளில் வெளியேற்றப்படும் கழிவான மொலாஸஸை வைத்து தயாரிக்கிறார்கள்!’ என்றார்.

கள்ளுக்கடையில்லாத அட்டப்பாடி

கேரளத்தின் அட்டப்பாடி ஏரியாவில் கள்ளுக் கடைகளுக்கு தடை நீடிக்கிறது. இங்குள்ள பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தப் பகுதிகளில் கள்ளுக் கடைகளோ, மதுக் கடைகளோ இல்லை. எனவே இங்குள்ளவர்கள் தமிழக எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைக்கே குடிக்க வருகிறார்கள். இதற்காக இங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்தும் கூட இங்கே வருகிறார்கள். இதனால் தமிழக டாஸ்மாக் கடையில் மாலை நேரங்களில் கூட்டம் குவிகிறதாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x