Published : 15 Jun 2016 12:38 PM
Last Updated : 15 Jun 2016 12:38 PM

அவசரகால பாதை திட்டப் பணிகளுக்காக கிரிவலப் பாதையில் மரங்கள் வெட்டுவதற்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு

கிரிவலப் பாதையில் அவசரகால பாதைத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ. 65 கோடி மதிப்பில் ‘அவசரகால பாதை’ சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஆதி அண்ணாமலை கிராமம் வழியாக செல்லும் சாலையில் கட்டிடங்கள் அதிகம் உள்ளதால் விரிவாக்கம் செய்ய முடியாது. அதனால், உள் வட்டப் பாதை என்று புதிய பாதை அமைக்க முடிவானது. அந்த பாதை, வருண லிங்கம் அருகே தொடங்கி விவசாயம் மற்றும் வன நிலங்கள் வழியாக வாயு லிங்கத்தை வந்தடைகிறது. இதனால் விவசாய நிலங்கள் மட்டும் இல்லாமல் வன விலங்குகளும் அழிக்கப்படும். புராண கால பாதையில் மாற்றம்கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியதால், புதிய பாதை அமைக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிரிவலப் பாதையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான மூலிகை மற்றும் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வெட்டி சாய்க்கப்பட உள்ள மரங்களில் வரிசை எண் எழுதி குறியீடு செய்துள்ளனர். அரச மரம், கொன்னை மரம், வாத நாராயண மரம், புளிய மரம், ஆலமரம், அத்தி மரம், பனை மரம், தென்னை மரம், வேப்பமரம், துறிஞ்சி மரம், புங்கன் மரம் உட்பட பல்வேறு மூலிகை மரங்கள், பல குளங்கள் மற்றும் கோயில்கள் மறைந்து போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிராண வாயு கிடைக்காது

திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “மரங்கள் வெட்டப்படுவதால் கிரிவல பக்தர்களுக்கு சுத்தமான பிராண வாயு கிடைக்காது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். நிழலும், காற்றும் தரும் மரங்களை அழித்து பாதையை அமைக்க வேண்டாம். புவி வெப்பமாவதால், 2026-ம் ஆண்டுக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு கருவும், கருப்பையும் இருக்காது என்று ஐநா எச்சரித்துள்ளது. ஒரு மரத்தை வளர்ப்பது என்பது, பெற்ற பிள்ளையை வளர்ப்பது போன்ற தாகும். மரம் வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதனை மனதில் கொண்டு மரங் களை வெட்டாமல் அவசர கால பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

பாதையில் மாற்றம் கூடாது

இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அருண்குமார் கூறும் போது, “மாசற்ற காற்றை சுவாசித்து பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ் சாலையில் 1 மரத்தை வெட்டினால் 3 மரக் கன்றுகள் நடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், ஒரு மரக் கன்றுக்கூட நடவில்லை. பாலை வனமாக காட்சி தருகிறது. அந்த நிலை, கிரிவலப் பாதையிலும் ஏற்படும். புராண கால பாதையில் மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது” என்றார்.

500 மரங்களை வெட்ட திட்டம்

வடக்கு வாசல் அறக்கட்டளை தலைவர் த.ம.பிரகாஷ் கூறும் போது, “பல நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் என்பது மக்களின் தேவைக்கு கிடையாது. ஆன்மிகமும், இயற்கையும் ஒன்று. மரங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x