Last Updated : 29 Dec, 2013 12:00 AM

 

Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

குடிசைகளுக்கு இலவச சிஎல்எப் பல்பு வழங்கும் திட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுக்க 14.59 லட்சம் குடிசைகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள் வழங்கும் திட்டத்தை கொடநாட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள், சென்னை மின் வாரிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள சூரியசக்தி மின் நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் மின் பற்றாக்குறையை தீர்க்கவும் மின் விநியோகத்தை சீரமைக்கவும் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக பல புதிய திட்டங்களை மின் வாரியம் மேற்கொண்டுள்ளது. மின்னழுத்தப் பிரச்சினை, புதிய மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை எளிதாக கொண்டு வருதல் மற்றும் காற்றாலை மின்சாரம் வீணாகாமல் மின் வாரிய மின்தொகுப்பில் இணைத்தல் போன்றவற்றுக்காக கயத்தார், கானார்பட்டி, ஒட்டியம்பாக்கம், சென்னை கொரட்டூர், தப்பக்குண்டு, காரமடை உள்பட 8 இடங்களில் துணை மின் நிலையங்களை மின் வாரியம் அமைத்து வருகிறது.

இவற்றில், கட்டுமானப் பணிகள் முடிந்த துணை மின் நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன. கொடநாட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா அவற்றை திறந்து வைக்கிறார்.

மேலும் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இலவச மின்சாரம் பெறும் ஏழைகளின் குடிசைகளுக்கு 9 வாட்ஸ் மற்றும் 11 வாட்ஸ் திறனில் சி.எப்.எல். பல்புகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தையும் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 14.59 லட்சம் குடிசைகளுக்கு இந்த பல்புகள் வழங்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோவாட் சூரியமின் சக்தி நிலையத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இந்த மின் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 60 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x