Last Updated : 19 Dec, 2013 09:08 PM

 

Published : 19 Dec 2013 09:08 PM
Last Updated : 19 Dec 2013 09:08 PM

ரயில்வே பட்ஜெட் நெல்லைக்கு சாதகமாகுமா?

ரயில்வே நிதிநிலை அறிக்கை, பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, கோட்ட அளவில் திட்ட வரைவுகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது.

புதிய அறிவிப்புகள்

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ரயில்வே நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தல் வருவதால் நிதிநிலை அறிக்கையில் பயணிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

திட்ட வரைவு தயாரிப்பு

இதற்காக, தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 6 கோட்டங்களில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், முதலில் திட்டக் கருத்துரு தயார் செய்யப்பட்டு தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதன்பிறகு, திட்ட கருத்துருவை ஒழுங்குபடுத்தி ரயில்களை இயக்குவதில் உள்ள பிரச்சினைகள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு, ரயில் எஞ்சின்கள் பராமரிப்பு என எல்லாவற்றையும் ஆராய்ந்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் முடிவு எடுப்பர்.

முழுவீச்சில் பணிகள்

ரயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களிலும் இருக்கும் கால அட்டவணைப் பிரிவு அதிகாரிகள் இணைந்து, ரயில் கால அட்டவணை மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில், பட்ஜெட்டில் புதிய வழித் தடங்களில் ரயில்கள் இயக்கம், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்தல், ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்குதல் போன்றவை குறித்து கலந்தலோசித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு, ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

அதன்படி. தற்போது மதுரை, திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திட்ட கருத்துருவை, தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ரயில் நிலையங்களில் கடந்த சில நாட்களுக்கு ன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா மேற்கொண்ட ஆய்வும்,திட்ட வரைவுகளை தயாரிப்பதற்கு முன்னோடி என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்கும் வாய்ப்புகளை திட்ட கருத்துருக்களில் அதிகாரிகள் இணைத்து, அது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பயணிகள் அமைப்புகள் எதிர்பார்த்திருக்கின்றன.

சூப்பர் பாஸ்ட் ரயில்

தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த பி. எட்வர்ட் ஜெனி கூறியதாவது:

*திருவனந்தபுரம் - மங்களுர் இரவு நேர ரயிலுக்கு ஐந்து பெட்டிகள் கொண்ட லிங்க் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

*கொச்சுவெலியிலிருந்து வேளாங்கண்ணி மற்றும் காரைக்கால் தடத்தில் நாகர்கோவில் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.

* திருச்சி – திருநெல்வேலி (எண்- 22627/28) இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

*கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினசரி சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும்.

* நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆண்டு முழுக்க கூட்டம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலியிலிருந்து,சென்னைக்கு கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.

* கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ரயில்வே அமைச்சகத்திடம் வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

பிப்ரவரியில் பதில்

தமிழகத்திலிருந்து, டெல்லிக்கு போதிய ரயில்வசதி இல்லை என்றும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது. டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதில், டில்லி தமிழ் சங்கமும் இணைந்து,தமிழகத்துக்கு அதிக ரயில்கள் இயக்க பல்வேறு கோரிக்கைகளை அமைச்சகத்திடம் வலியுறுத்திவருகிறது

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் ரயில்வேதுறையிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் ரயில் பட்ஜெட்டில் பதில் கிடைக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x