Last Updated : 16 Jan, 2014 12:00 AM

 

Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

ஆட்சியரின் ஷூவை சுமந்த உதவியாளர்: டபேதார் முறை முடிவுக்கு வருமா?

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஷூவை அவரது உதவியாளர் (டபேதார்) சுமந்து நின்ற சம்பவம் அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சி மன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் மகளிர் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்களும், மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

டபேதார் கையில்...

முன்னதாக காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் நடராசன், கூட்டம் நடைபெறும் இடம் அருகே கழட்டி வைத்த ஷூவை, டபேதார் ராஜகோபால் கையில் ஏந்தி நீண்டநேரம் (அரை மணிக்கும் மேல்) நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும், ஆட்சியர் நடராசன் ஷூவை அணிவதற்கு வசதியாக டபேதார் கீழே வைத்த ஷூவை அணிந்து கொண்டு ஆட்சியர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஜி. பைரவ நாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், அரசு நிகழ்ச்சி ஒன்றின்போது, ஆட்சியரின் ஷூவை டபேதார் ராஜகோபால் நீண்டநேரம் கையில் சுமந்து நின்ற சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தடுக்கவில்லை?

ஷூவை ஆட்சியர் சுமக்கச் சொன்னாரா அல்லது ராஜ கோபால் விரும்பிச் சுமந்தாரா என்பது விவாதத்துக்குரிய பொருள் அல்ல. அனைத்துத் துறை அலுவலர் களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே, பொது இடத்தில் தனது ஷூவை அரசு ஊழியர் ஒருவர் கையில் எடுத்ததை ஏன் தடுக்கவில்லை என்பதே கேள்வி.

இந்த நிகழ்வு, நாட்டின் 65 ஆண்டுகால சுதந்திரத்தின் பலனாக பெற்ற தனி மனித உரிமையையும் சுயமரியாதையையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதை அரசு ஊழியர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசனின் கருத்துக்களை அறிய அவரது செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆர்வத்தில்...

ராஜகோபால் 2 மாதங்களுக்கு முன்னர்தான் டபேதார் பணியில் சேர்ந்துள்ளார். ஆட்சியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, ஆர்வத்தில் இப்படி செய்துள்ள தாகத் தெரிகிறது. அவரிடம் விசாரித்தபோது, “ஆட்சியர் ஷூவை காரில் கொண்டுவைக்க கூறியதால், தான் எடுத்துச் சென்றதாகவும், ஆனால் நீண்டநேரம் தான் கையில் வைத்திருக்கவில்லை என்றும் கூறுகிறார்” என்கின்றனர் வருவாய் துறை ஊழியர் சங்கத்தினர்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலரின் உத்தர வின் பேரில் இச்சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காலனிய காலத்து முறை

“அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 14) எல்லோரும் சமம் என்கிறது. மனித உரிமைகள் குறித்த பல சட்டங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இந்த நிகழ்வை அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஐஏஎஸ் அலுவலர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக இருப்பதாலும், மக்கள் எளிதில் அணுக வேண்டியவர்களாக இருப்பதாலும் காலனிய காலத்து டபேதார் முறையையும் அவர்கள் டவாலி அணியும் வழக்கங்களுக்கும் முடிவு கட்ட இதுதான் சரியான நேரம். இதை தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும். திருவாரூர் சம்பவம் இதன் அவசியத்தையே உணர்த்துகிறது என்கிறார்” அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வெ. ஜீவக்குமார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகம், தன்னிடம் பணி புரிந்த டபேதார்கள் டவாலி அணிந்து வருவதை தடை செய்ததும், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்துரு, நீதிமன்றத்துக்குள் நுழையும்போது டபேதார்கள் பொதுமக்களை எச்சரிப்பதையும் தடுத்த முன்னுதாரணங்கள் உள்ளன. இவை தனி நபர்களின் விருப்பங்களாக மட்டும் அல்லாமல், பொது விதியாக மாற்றப்படும்போதே இதுபோன்ற பாகுபாடுகளை நிரந்தரமாகக் களைய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x