Last Updated : 15 Sep, 2016 11:56 AM

 

Published : 15 Sep 2016 11:56 AM
Last Updated : 15 Sep 2016 11:56 AM

புதுச்சேரி: நாராயணசாமி போட்டியிட நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் இன்று ராஜிநாமா செய்தார். இக்கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக தேர்வானார்.

முதல்வராக தேர்வான நாராயணசாமி ஆறு மாதத்துக்குள் புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதையடுத்து அவர் புதுச்சேரியில் நகரப்பகுதியில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவார் என பரவலான பேச்சு எழுந்தது.

இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. அதில் பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ ஜான்குமாருடன் டெல்லிக்கு சென்று கட்சியின் மேலிட பார்வையாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக்கை சந்தித்தனர்.

புதுச்சேரியிலேயே கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏவான ஜான்குமார் வென்றார்.

முதல்வர் நாராயணசாமி இத்தொகுதியில் போட்டியிட உள்ள விவரம் கட்சித்தலைமையின் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில் நூறு நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள முதல்வர் நாராயணசாமி இன்று காலை டெல்லி சென்றார். அவர் சோனியாவை சந்திக்க சென்றுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவித்தனர்.

முதல்வராக பொறுப்பேற்று இன்னும் 78 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய சூழல் முதல்வர் நாராயணசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார் சட்டப்பேரவைக்கு இன்று வந்தார். அவர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை தந்தார். அப்போது மாநிலத்தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள் கந்தசாமி, கமலகண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஜான்குமார் கூறுகையில், " பிரதிபலன் ஆதாயம் பார்த்து தொகுதியை விட்டு தரவில்லை. கட்சித்தலைமை உத்தரவை கடைபிடித்தேன். நான் பல கோடிபெற்று தொகுதியை விட்டுத்தந்ததாக யாராவது நிரூபித்தால் எனது சொத்து முழுவதையும் தர தயார்.

வரும் 1ம் தேதி முதல் முதல்வர் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெறுவோம். சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் வெல்வார். முதல்வரால் எனது தொகுதி வளர்ச்சியடையும். அதே நேரத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்" என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, "ஜான்குமார் எம்எல்ஏவின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதி காலியிடமாக அறிவித்து அரசாணை வெளியாகும். காலியிட விவரம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x