Published : 11 Sep 2016 08:37 AM
Last Updated : 11 Sep 2016 08:37 AM

21-ம் நூற்றாண்டில் பாதுகாப்பு சவால்கள் அதிகரிப்பு: நாட்டின் அமைதியை உறுதி செய்ய வேண்டும் - ராணுவத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

பாதுகாப்பு தொடர்பான கடுமை யான சவால்களை சந்தித்து வருவ தால் நாட்டின் ஸ்திரத்தன்மை, அமைதியை ராணுவத்தினர் உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 102-வது பிரிவின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று, சிறப்பாக பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

முன்னதாக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குடியரசுத் தலைவரை ராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் திறந்த ஜீப்பில் சென்று பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தாய்நாட்டை காப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மொத்தம் 269 பேர் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இவர்களில் ஒரு பெண் உட்பட 20 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 3 பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறப்பான முறையில் பயிற்சியை முடித்த அல்லா தருக்கு தங்கப் பதக்கம், திவ்யா தியாகிக்கு வெள்ளிப்பதக்கம், ராகேஷ்.டி.ஆர்.க்கு வெண்கலப் பதக் கத்தை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

பன்முகத்தன்மை கொண்ட நம் எல்லோரையும் நாட்டின் தேசியக் கொடியும், இந்திய அரசியலமைப்பு சட்டமும்தான் ஒன்றுபடுத்துகிறது. இங்கு பயிற்சி முடித்துள்ள இளம் ராணுவ அதிகாரிகளுக்கு எனது வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற வும், பாதுகாப்பை உறுதி செய்ய வும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டில் மனிதர்கள் மற்றும் இயற்கையால் ஏற்படும் பிரச்சினைகளின் தீர்வுக்கு ராணு வத்தைதான் மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இந்தியா, 21-ம் நூற்றாண்டில் பாதுகாப்பு தொடர்பாக கடுமை யான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை சமாளிப் பதற்கு திறமையான, ஆற்றல் மிக்க ராணுவத்தினர் தேவைப்படு கின்றனர். தற்போதைய சூழலில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ராணுவத்தினர் உறுதி செய்ய வேண்டும். தன்னல மற்ற, நாட்டுப்பற்று கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி முடித்த ராணுவ வீரர் களுக்கு நட்சத்திரப் பட்டையை பிரணாப் முகர்ஜி அணிவித்தார். அதை அணிந்து கொண்டதும் ராணுவ அதிகாரிகளாக ஆகிவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் துள்ளிக் குதித்தனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் க.பாண்டியராஜன், ராணுவ உயர் அதிகாரிகள், பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலோர் பி.இ. பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எழும்பூர் வி.சரண்யா, வேலூர் பொய்கை கிராமம் ஜெ.ஆர்த்தி, பொள்ளாச்சி வேடசந்தூர் கிராமம் கே.ஜி.ஈஸ்வரன், நாகர்கோவில் சஞ்சோத் டேனியல் பிரைட் ஆகியோர் பி.இ. பட்டம் பெற்றவர்கள். இவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் ராணுவ அதிகாரியாக விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x