Published : 05 May 2017 01:44 PM
Last Updated : 05 May 2017 01:44 PM

மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு: நாளை தீர்ப்பு

மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

இதுதொடர்பான உத்தரவை நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்தார்.

வழக்கு குறித்து அவர் கூறும்போது, ''ஏன் இவ்வளவு நாட்களாக இந்திய மருத்துவ கவுன்சில் மீது வழக்கு தொடுக்கவில்லை? இத்தனை வருடங்களாக மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளைத்தானே பின்பற்றினீர்கள்?

50% இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டமாக முடியாது'' என்று கூறியுள்ளார்.

வழக்கின் பின்னணி

முன்னதாக அரசு மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதனால் தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்துவதா? இல்லை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்தது.

மருத்துவர்கள் போராட்டம்

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாறுபட்ட கருத்து

இது தொடர்பாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. மே 3-ம் தேதி இருவரும் தீர்ப்பளித்தனர். நீதிபதி கே.கே.சசிதரன் தனது தீர்ப்பில், ‘‘மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டை பின்பற்றி நடத்திக்கொள்ள தமிழக அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக இல்லை’’ என தீர்ப்பளித்தார்.

ஆனால் நீதிபதி கே.கே.சசிதரனின் தீர்ப்பிற்கு முரணாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். ‘‘மருத்துவ பட்டமேற்படிப் புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி வரும் மே 7-ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

நாளை தீர்ப்பு

நீதிபதிகள் இருவரும் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பைக் கூறியதால் இந்த வழக்கை மூன்றாவதாக நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். அதன் தீர்ப்பு நாளை (சனிக்கிழமை) வெளியாகிறது.

இந்நிலையில் மூன்றாவது நீதிபதியுடைய உத்தரவின் அடிப்படையிலேயே தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x