Published : 20 Apr 2017 04:39 PM
Last Updated : 20 Apr 2017 04:39 PM

இந்தியைக் கட்டாயமாக்கும் எல்லா முயற்சிகளையும் திராவிட இயக்கம் முறியடிக்கும்: வைகோ

இந்தியைக் கட்டாயமாக்கும் எல்லா முயற்சிகளையும் 1937-ம் ஆண்டில் இருந்து எதிர்த்துப் போராடி வரும் திராவிட இயக்கம் முறியடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும், எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகிறது.

பாஜக அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கிறார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் இந்தி அறிந்து இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றதோ என்கிற ஐயம் எழுகிறது.

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இனி பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரின் ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைச் சட்டமாக்குவதும் கடும் கண்டனத்துக்கு உரியவை.

இந்தியைக் கட்டாயமாக்கும் எல்லா முயற்சிகளையும் 1937-ம் ஆண்டில் இருந்து எதிர்த்துப் போராடி வரும் திராவிட இயக்கம் முறியடிக்கும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x