Published : 25 Jul 2016 08:54 AM
Last Updated : 25 Jul 2016 08:54 AM

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க ஆபரேஷன் தலாஷ் : 3-ம் நாளாக தேடுதல் வேட்டை தீவிரம்

கடலில் கிடந்த மர்ம பொருள் விமானத்தின் பாகம் அல்ல



மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க ‘ஆபரேஷன் தலாஷ்’ என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 3-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி காலை அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு புறப்பட்டு சென்ற ஏஎன்-32 வகை விமானம், திடீரென மாய மானது. அதில் 6 விமானிகள், 11 விமானப் படை வீரர்கள், 9 கடற்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை வீரர் ஒருவர் என மொத்தம் 29 பேர் பய ணம் செய்தனர். விமானம் கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மாயமான விமானம் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது விமானத்தின் உதிரிபாகமாக இருக்குமோ என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அது படகு ஒன்றின் உதிரிபாகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படை தகவல் தொடர்பு அதிகாரி அனுபம் பானர்ஜி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவும் சூழ்நிலையிலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தைரியம் அளித்து வருகிறோம்’’ என்றார்.

மத்திய பாதுகாப்புத் துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாயமான ஏஎன்-32 விமானத்தை தேடும் பணிக்கு ‘ஆபரேஷன் தலாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலையுணர்வு மையம், பெங்களூரில் உள்ள தேசிய கடல் தகவல் மையத்தின் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணை

ஏஎன்-32 விமானம் மாயமானது குறித்து தாம்பரம் விமானப்படை மையத்தின் விங் கமாண்டர் ஜெகதீப் சிங், நேற்று முன்தினம் இரவு சேலையூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். காணாமல் போன 29 பேரின் பெயர்களை மட்டுமே புகாரில் குறிப்பிட்டிருந்ததால் அவர்களுடைய முகவரிகளை சேகரிப்பதற்காக போலீஸார் நேற்று தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, மாயமான விமானத்தில் பயணம் செய்த 16 பேரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. அவர்கள் பத்சரா, நந்தா (விமானிகள்), குணால் (வழிகாட்டி விமானி), ராஜன் (பொறியாளர்), தீபிகா (விமானப்படை அதிகாரி), சஞ்சீவ் குமார் (விமானப்படை வீரர்), விமல் (ராணுவ பொறியாளர்) மற்றும் விசாகப்பட்டினம் கப்பல்படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்தர் சிங், மகாராணா, சின்னா ராவ், சீனிவாச ராவ், தூத்துக்குடியைச் சேர்ந்த கடலோர காவல் படை வீரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x