Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

தேர்தலுக்கு தயாராகிறது கொ.ம.தே.க. : திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மாநாடு

கொங்கு மண்டலத்தில் தங்களது செல்வாக்கை காட்டும் வகையில், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துவதன் மூலம், அரசியல் கட்சிகளின் பார்வையை தங்கள் பக்கம் திரும்ப வைக்க, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட முயற்சி எடுத்து வருகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாடு, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது. இந்த மாநாடு குறித்து கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும், பெருமளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் மாநிலப் பொது செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பல்வேறு பகுதிகளில் மாநாடு விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், கொ.ம.தே.க. போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணியாக இந்த மாநாடு நடக்கவுள்ளது என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

தனித்து போட்டி

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், கொங்குநாடு மக்கள் கட்சி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியது. லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற அந்த மாநாடு கட்சியின் பலத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதன் எதிரொலியாக கடந்த 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து களமிறங்கியது.

சாதி ரீதியான பலத்துடன், கொங்கு மண்டலத்தில் தீர்க்கப் படாமல் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி, வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கினர். 12 தொகுதி களிலும் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக அமைந்தது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சி. ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. இருப்பினும், நான்கு லட்சம் வாக்குகளைப் பெற்றது.

சட்டசபைத் தேர்தல் தோல்வி கொங்குநாடு மக்கள் கட்சியில் கருத்து பேதங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஈஸ்வரன் தலைமையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உதயமானது. பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த அணியில் சேர்ந்தனர். இந்நிலையில், தற் போது தங்களது பலத்தைக் காட்ட பெருமாநல்லூரில் மாநாட்டை நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x