Published : 02 Oct 2014 12:58 PM
Last Updated : 02 Oct 2014 12:58 PM
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ஹோபர்ட்ஸ் ஹரிகேன்ஸ் அணி யும் ஹைதராபாதில் இன்று மோதுகின்றன.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ச்சியாக 13 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் நடப்பு ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா, அரையிறுதியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. கொல்கத்தா அணி கேப்டன் கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ரியான் டென் தஸ்சாத்தே என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
இவர்கள் அனைவருமே நல்ல பார்மில் உள்ளனர். இவர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டால்கூட அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும். பந்துவீச்சைப் பொறுத்த வரையில் அந்த அணியின் துருப்பு சீட்டாகத் திகழும் சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தாலும், இந்த ஆட்டத்தில் அவர் விளையாடுவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என தெரிகிறது.
டிம் பெய்ன் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. லீக் சுற்றில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தை தவிர எஞ்சிய 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.