Last Updated : 23 Nov, 2013 08:37 AM

 

Published : 23 Nov 2013 08:37 AM
Last Updated : 23 Nov 2013 08:37 AM

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
ரூ.120 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.120 கோடி செலவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் 8 அடுக்கு மாடிகளாக இது கட்டப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவைக் கூடமும், புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமை செயலகம், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும், அந்த வளாகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதியுள்ள பணிகளை வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிக்கவும், மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.120 கோடி செலவில்...

இந்நிலையில், புதிய தலைமைச் செயலக வளாகத்தின் ‘பி’ பிளாக் அமைந்துள்ள பகுதியில் ரூ.120 கோடி செலவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இப்போது 20-வது அரசு மருத்துவக் கல்லூரி, இங்கு கட்டப்படுகிறது. தரைத்தளம் உள்பட 8 மாடிகளுடன் மொத்தம் 7 டவர்கள் கட்டப்படுகின்றன.

அதிநவீன வசதிகள்

புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி தொடங்கும் முன்பே, தீ தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து தொடர்பான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்கான நிர்வாகக் கட்டடம், வகுப்பறைகள், ஆய்வகக்கூடங்கள், அறுவைச் சிகிச்சை அரங்குகள், மாணவ, மாணவியர் விடுதிகள், இரவுப் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வறைகள், கூட்ட அரங்கம், செவிலியர்களுக்கான விடுதி ஆகியன அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளன.

முழுவீச்சில் பணிகள்

புதிய தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட ‘பி’ பிளாக்கில் 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள், ஆட்சி மாற்றம் மற்றும் வழக்குகள் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது அந்த இடத்தில்தான் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கட்டுமானப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலமாக இருப்பதால், கட்டுமானப் பணி பாதிக்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x