Published : 18 Feb 2017 11:16 AM
Last Updated : 18 Feb 2017 11:16 AM

புதிய அரசுக்கு எதிராக போராட்டம்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆவடி எம்எல்ஏ பாண்டியராஜன் தவிர மற்ற அதிமுக எம்எல்ஏக்கள், சசிகலா தரப்பின் ஆதரவாளராக நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் அரசின் புதிய அமைச்சரவைக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம், ஊர்வலம், எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை என போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்கக் கூடாது என முழக்கமிட்டனர்.

திருவள்ளூர் நேதாஜி தெரு பகுதியில் திருவள்ளூர் நகராட்சியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட ஓ.பன்னீர்செலவம் ஆதரவாளர்களான அதிமுகவினர் 70- க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் புதிய அமைச்சரவைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகே பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் பேரணி நடந்தது. அங்கு எம்எல்ஏ விஜயகுமாருக்கு எதிராக நடந்த பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

திருத்தணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், தங்கள் தொகுதி எம்எல்ஏ நரசிம்மன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் வாக்களிக்க வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர். பூந்தமல்லியில், பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் பனையாத்தம்மன் கோயில் அருகே இருந்து பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை அலுவலகம் வரை முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான பெஞ்சமின் அலுவலகத்தையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானோரை போலீஸார் கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x