Published : 11 Jul 2016 08:47 AM
Last Updated : 11 Jul 2016 08:47 AM

மணலி அதிமுக கவுன்சிலர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது

மணலியில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ரா.ஞானசேகர் (50). மாநகராட்சி 21-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை மணலி பாடசாலை பகுதியில் உள்ள நண்பரின் கடையில் இருந்த இவரை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் சரமாரியாக வெட்டினர். கழுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஞானசேகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து அறிந்ததும் மணலி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உடனடியாக வாகன சோதனை நடத்தப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ஞானசேகரை கொலை செய்ததாக நேற்று பிற்பகலில் மாதவரம் காவல் நிலையத்தில் 4 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஜெபகுமார் (22), ராஜேஷ் (33), ராஜீவ் (23), பிரபு (24) என்பது விசாரணையில் தெரியவந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

கவுன்சிலர் ஞானசேகர், தினமும் மாலையில் பாடசாலையில் உள்ள நண்பர் சுந்தர்ராமின் அடகுக் கடைக்கு வருவது வழக்கம். நேற்று முன்தின மும் அப்படி வந்தபோதுதான் கடைக் குள் வைத்தே அவரை வெட்டிக் கொலை செய்தனர். அடகுக் கடையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 மோட்டார் சைக்கிள் களில் 5 பேர் வருவதும் ஞானசேகரை வெட்டிக் கொலை செய்வதும் முழுமையாக பதிவாகியுள்ளன.

சரண் அடைந்த 4 பேரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், அவர்கள் பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் ஞானசேகருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அவரது தூண்டுதலின் பேரில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜெயலலிதா கண்டனம்

ஞானசேகர் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி அதிமுக அவைத் தலைவரும், சென்னை மாநகராட்சி 21-வது வட்ட மாமன்ற உறுப்பினருமான முல்லை ஆர்.ஞானசேகர் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். இந்தப் படு கொலைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந் தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு முறையான தண்ட னையை பெறுவது உறுதி. சகோதரர் ஞானசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x