Last Updated : 31 Jan, 2014 12:00 AM

 

Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

வரும் நிதியாண்டுக்கான திட்டப் பணிகளுக்கு ரூ.42,185 கோடி- சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா அறிவிப்பு

பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்காக, வரும் நிதியாண்டில் திட்ட அளவு ரூ.42,185 கோடி அளவுக்கு உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவர் ப.தனபால், செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று அவைக்குள் அழைத்து வந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று, ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர். பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்த ஆளுநர் ரோசய்யா, சரியாக 12 மணிக்கு ஆங்கில உரையை வாசிக்கத் தொடங்கினார். அவர் கூறியதாவது:

இந்த அரசு, வெற்றிகரமான மூன்று ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் முக்கிய மாற்றங் களையும், சிறந்த சாதனைகளையும் கண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கனவு நனவாகியுள்ளது. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியால் சாதாரண மக்களும் அதிக அளவில் பயன்பெறும் வகையில், வளர்ச்சித் திட்டங்களை தொலைநோக்குப் பார்வை கொண்ட முதல்வர் ஜெயலலிதா செயலாக்கியதன் காரணமாகவே இது சாத்தியமானது.

இந்த நோக்கத்தை எட்டும்வித மாக, குறிப்பிட்ட துறைகளையும் பின்தங்கிய பகுதிகளையும் இலக்காகக் கொண்டு, சிறப்பான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணப்பட்டு வருகின்றது.

வறட்சியால் பயிர் பாதிப்பு, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரம் பாதிப்பு என மாநிலத்தின் வளர்ச்சி பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

இதுபோன்ற சோதனைகளைத் திறன்மிக்க தலைமையின் கீழ் சமாளித்து, நமது மாநிலம் வெற்றிகரமாக மீண்டெழும். இந்தப் போக்கினை எதிர்கொண்டு, பொருளாதாரச் சூழலை மேம்படுத்தவும், பொருளா தாரத்துக்குப் புத்துயிரூட்டவும் அரசு உறுதி பூண்டுள்ளது. 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013-14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு, 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் துறையிலும் வேளாண் உற்பத்தியிலும் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியால் சேவைத் துறை வளர்ச்சியும் மீண்டு எழும் வாய்ப்பு உள்ளது. மேலும், பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்காக, 2013-14ம் ஆண்டுக்கான திட்டச் செலவு இலக்கை ரூ.37,128 கோடியாக அரசு உயர்த்தியுள்ளது. 2014-15ம் ஆண்டில், திட்ட அளவு ரூ.42,185 கோடி அளவுக்கு உயர்த்தப்படும்.

பொது அமைதி

அரசின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, மாநிலத்தில் பொது அமைதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சமூகவிரோத சக்திகள், மாவோயிஸ்ட்களின் நடவடிக் கைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. முதல்வரின் மதிநுட்பமிக்க நடவடிக்கையால் நீண்ட காலமாக இலங்கையால் கைது செய்யப் பட்டிருந்த 295 மீனவர்களும், படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள் ளனர். இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார். அவர் தனது ஆங்கில உரையை 50 நிமிடங்கள் படித்தார். அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் தனபால் வாசித்தார். தமிழாக்க உரை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. 1.37 மணிக்கு அவை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

திமுக வெளிநடப்பு

முன்னதாக, ஆளுநர் தனது உரையைத் தொடங்கியதும் திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அவருக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து ம.ம.க.வின் இரு உறுப்பினர்கள், புதிய தமிழகம் கட்சித்

தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அவையில் இருந்து வெளியேறினர்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக உறுப்பினர்களில் பலர் அவைக்கு வரவில்லை. கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் அவை முடியும் வரை அமர்ந்திருந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களில் விஜயதாரணி மட்டும் தாமதமாக வந்தார். பாமகவில் அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசன் மட்டும் அவைக்கு வந்திருந்தார். மற்ற இருவர் வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x