Published : 23 Feb 2017 12:08 PM
Last Updated : 23 Feb 2017 12:08 PM

கோவையில் பூட்டிவைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கான பன்முக மருத்துவமனை: மின் இணைப்புகள் முழுமை பெறாததே காரணம்

கோவை டவுன்ஹாலில் உள்ள தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மிகப் பழமையான கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் மட்டுமல்லாது, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் நோக்கில், இந்த வளாகத்தில் கால்நடை பன்முக மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்திலேயே முதல்முறையாக செல்லப் பிராணிகளுக்கான பன்முக மருத்துவமனையாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது. செல்லப் பிராணிகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களில் மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், திடீரென கடந்த 4 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டு, கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கட்டிடப் பணிகள் முடிந்தாலும், மின் இணைப்புகள் முழுமை பெற வேண்டும் என்பதால் மருத்துவமனையை பயன்படுத்த முடியாமல் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர்.

கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் கேட்டபோது, ‘மருத்துவமனைக் கட்டிடப் பணிகளை முழுமையாக பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது. அதில் கட்டுமானப் பிரிவுப் பணிகள் முடிந்து, எலக்ட்ரிகல் பிரிவுக்கு ரூ.6.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மின் இணைப்புகளுக்கு மேலும் ரூ.1.5 லட்சம் தேவை என அந்த பிரிவு கூறுகிறது. பொதுப்பணித்துறைக்குள் உள்ள இரு பிரிவுகளுக்கு இடையேயான நிதி பங்கீட்டுப் பிரச்சினையால் சகல வசதிகளையும் கொண்டுள்ள பன்முக மருத்துவமனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனிடையே கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

வசதிகள் ஏராளம்

‘அனைத்து வகை கால்நடைகளுக்குமான பொது மருத்துவமனையாக இயங்கியதில், பிரத்யேகமாக செல்லப் பிராணிகளுக்கான மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேனிங், அறுவை சிகிச்சை பிரிவு, பிசியொதெரபி உள்ளிட்ட உயர் மருத்துவ வசதிகளும், வெளிநாடுகளிலிருந்து உடனுக்குடன் ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கத் தேவையான காணொலிக்காட்சி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மனிதர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனையைப் போல செல்லப் பிராணிகளுக்கு இந்த மருத்துவமனை திகழும்’ என்கின்றனர் மருத்துவர்கள்

கால்நடைத் துறையே காரணம்

பொதுப்பணித்துறை (மின் இணைப்புப் பிரிவு) அதிகாரிகள் கூறும்போது, ‘மின் இணைப்புகளுக்கு தனியாக ரூ.8 லட்சம் தேவை. ஆனால் 6.5 லட்சம்தான் ஒதுக்கப்பட்டது. பொதுப்பணித்துறையில் சேமிப்பு நிதி இல்லை என்பதால், கால்நடை பராமரிப்புத்துறையிடமே கூடுதலாக ரூ.1.5 லட்சம் கேட்டோம். அவர்கள் நிதி ஒதுக்கியிருந்தால் 6 மாதங்களுக்கு முன்பே பணி முடிந்திருக்கும். ஆனால் நிதி கிடைக்கவில்லை. எனவே குளிர்சாதன வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதியைப் பயன்படுத்தி பெரும்பாலான பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நிதி கிடைக்கும்போது எஞ்சிய பணிகளை முடித்துவிடுவோம். மார்ச் இறுதிக்குள் மருத்துவமனை பணிகள் முடிந்துவிடும்’ என்றனர்.

கட்டிடம் கட்டி முடித்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது

நிதி பிரச்சினையால் மருத்துவமனை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தைச் சுற்றிலும் புதர் மண்டி, சுவர்கள் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாதியில் நிற்கும் மின் இணைப்புகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் இம்மருத்துவமனை வளாகத்தில் திருட்டு முயற்சி நடந்ததாக போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x