Published : 16 Oct 2014 10:14 AM
Last Updated : 16 Oct 2014 10:14 AM

உலக மசாலா: பார்சிலோனா கிளப்பில் சிரிப்பதற்கு காசு

சூடாக்கப்பட்ட கருவிகள் மூலம் செதுக்கும் சிற்பங்களை பைரோகிராபி என்பார்கள். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜோர்டன் மாங் ஒசான் பைரோகிராபியில் கைதேர்ந்தவர். மரப்பலகையில் ஓவியங்களை வரைந்து, லென்ஸ் மூலம் சூரிய வெப்பத்தைக் குவித்து அழகான ஓவியங்களை உருவாக்கி விடுகிறார்! சூரிய வெப்பத்தின் மூலம் ஓர் ஓவியத்தை வரைந்து முடிப்பதற்கு பல மாதங்களாகிவிடும். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த ஜோர்டன் சின்ன வயதிலேயே ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தவர்.

மற்ற ஓவியர்களில் இருந்து தான் எவ்வாறு வித்தியாசப்படுவது என்று யோசித்தவருக்கு, சூரிய வெப்பத்தைக் குவித்து உருவாக்கும் ஓவியம் பற்றிய சிந்தனை வந்தது. இன்று அந்த வித்தியாசமான சிந்தனை, மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது! வெயிலில் மணிக்கணக்காகப் பொறுமையுடன் இந்த ஓவியங்களை உருவாக்க வேண்டும்!

உழைப்புக்கு ஏற்ற மரியாதை!

பார்சிலோனாவில் உள்ள ஒரு காமெடி கிளப் புதுமையான வகையில் செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த கிளப்புக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆனால் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு தடவை சிரிக்கிறீர்களோ, அவ்வளவு பணம் செலுத்த வேண்டும்! ஒவ்வோர் இருக்கைக்கு முன்பும் சிரிப்பை அளவிடுவதற்கான திரை வைக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியைப் பார்த்து, சிரிக்கச் சிரிக்க திரையில் பதிவாகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கட்டணத்தைச் செலுத்திவிட்டு வரவேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஒருமுறை கூட சிரிக்கவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை! தியேட்டர்களுக்கான வரி அதிகமானதால், பார்வையாளர்கள் குறைந்து போனார்கள். சிரிப்புக்கு மட்டும் கட்டணம் என்ற புதிய முயற்சியில் ஏராளமான பார்வையாளர்கள் தியேட்டருக்குப் படையெடுக்கிறார்கள். முன்பு இருந்ததை விட வருமானம் பல மடங்கு அதிகரித்து இருப்பதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி. ஸ்பெயின் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறார்கள்!

அளவுக்கு அதிகமா சிரிச்சிட்டு, பணம் கொடுக்கிறப்ப அழாமல் இருந்தால் சரிதான்!

உலகிலேயே மிக அதிகமான படிகள் கொண்ட அமைப்பு ஸ்விட்சர்லாந்தில் உள்ள நீசென் மலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஸ்விஸ் பிரமிட் என்று அழைக்கிறார்கள். 3.4 கி.மீ. தூரத்துக்கு 11,674 படிகள் ஏறினால்தான் உச்சியை அடைய முடியும். இந்தப் படிப்பாதை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறந்துவிடப்படுகிறது. அன்றைய தினம் படி ஏறும் போட்டி நடைபெறுகிறது. சுமார் 500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் 1 மணி நேரம் 2 நிமிடங்களில் உச்சியை அடைந்த ஆணும், 1 மணி நேரம் 9 நிமிடங்களில் உச்சியை அடைந்த பெண்ணும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஐயோ… படிக்கும்போதே மூச்சு வாங்குதே…

உலகிலேயே மிக உயரமான மாடு என்ற சாதனையை நிகழ்த்தி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டது பிளாசம்! கனடாவில் உள்ள ஆரஞ்ச்வில்லியில் வாழும் பிளாசம் 6 அடி 4 அங்குலம் உயரம்கொண்டது. பேட்டி ஹான்சன் தன்னுடைய உயரமான பிளாசமை நினைத்துப் பெருமைகொள்கிறார். 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் பிளாசம் இடம்பெற இருக்கிறது!

வாழ்த்துகள் பிளாசம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x