Published : 11 Dec 2013 05:58 PM
Last Updated : 11 Dec 2013 05:58 PM

ஓரினச் சேர்க்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ நீக்க கோரி, ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை ரெயின்போ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று பிற்பகல் திடீரென ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அதில், சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்க கோரி பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து சென்னை ரெயின்போ கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, "சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் போராடிய பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் கூட நீடிக்கவில்லை.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எங்களை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தொடர்ந்து, போராட்டம் நடத்தவுள்ளோம்.

கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எங்களையும் மற்றவர்களை போல், வாழ விடுங்கள். இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். மேலும், டெல்லியில் நாடுமுழுவதும் உள்ள ஓர்பால் ஈர்ப்பு பிரிவினரை சேர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளோம்" என்றனர் அவர்கள்.

முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில், ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x