Published : 14 Dec 2013 09:55 AM
Last Updated : 14 Dec 2013 09:55 AM

சென்னையில் வன்முறை: கல்லூரி மாணவர்கள் 11 பேர் ஒரே நாளில் கைது

சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 11 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு மட்டும் கல்லூரி மாணவர்கள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப் பேட்டையில் வியாழக்கிழமை மாநகர பேருந்துக்குள் இருந்த 3 மாணவர்களையும், ஒரு பெண்ணையும் மாணவர்கள் வெட்டினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான காசிமேடு சுப்பு ராஜ், தண்டையார்பேட்டை நாகராஜ், மூலகொத்தளம் தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தீவிர மாக ஈடுபட்டுள்ளார்.

இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் அதே நாளில் மாலையில் ஓட்டேரியில் மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை நந்தனம் கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். ஓட்டேரி ஸ்ட்ராஹன்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் மாநிலக் கல்லூரி மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. இதில் மாநிலக் கல்லூரி மாணவர் நேசக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இது குறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கலைக் கல்லூரியை சேர்ந்த சிரஞ்சீவி, கலைச்செல்வன், ரியாஸ், தாமு, குமார், பார்த்திபன், முல்லை விஷால், குமரரேசன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். வியாழக்கிழமை மட்டும் மாண வர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

37 வழக்குகள்

சென்னையில் நடந்த மாணவர்கள் மோதலில் இந்த ஆண்டு மட்டும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 145 மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் 55 பேரும், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 31 பேரும், நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் 13 பேரும், லயோலா கல்லூரி மாணவர்கள் 16 பேரும், வண்ணாரப்பேட்டை தியாகராஜா கல்லூரி மாணவர்கள் 7 பேரும், புதுக் கல்லூரி மாணவர்கள் 5 பேரும், வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரியில் 25 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். நந்தனம் கலைக் கல்லூரியில் 11 பேர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டதாக பச்சையப்பன் கல்லூரியில் 4 பேரும், மாநிலக் கல்லூரியில் 2 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x