Published : 26 Oct 2014 12:09 PM
Last Updated : 26 Oct 2014 12:09 PM

தேவர் ஜெயந்திக்காக 13 கிலோ தங்கக் கவசம் ஒப்படைப்பு: நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கினார் முதல்வர்

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மதுரையிலுள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் நேற்று வெளியே எடுக்கப்பட்டது. அதை நினைவிட பொறுப்பாளரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை குருபூஜை மற்றும் ஜெயந்திவிழா நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாவில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, நினைவிடத்திலுள்ள தேவரின் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிப்பதாக அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பசும்பொன் வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவித்தார். அதன்பின் அடுத்த 4 மாதம் வரை இந்தக் கவசம் தேவரின் சிலையிலேயே பொருத்தப்பட்டிருந்தது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில் முத்துராமலிங்கத் தேவரின் மருமகளும், நினைவிட பொறுப்பாளருமான காந்திமீனாள் நடராஜன், அதிமுக பொருளாளரும், தற்போதைய முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை அண்ணாநகரிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இணைப்பு வங்கிக் கணக்கைத் தொடங்கினர். அதன்மூலம் அந்த வங்கியின் லாக்கரில் தேவரின் தங்கக் கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேவரின் 107-வது ஜெயந்தி விழா மற்றும் 52-வது குருபூஜை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. எனவே வங்கி லாக்கரில் இருந்த தங்கக் கவசத்தை மீண்டும் எடுக்க முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்படி நேற்று மதியம் விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தார். அதேபோல் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், அவரது மருமகன்கள் பழனி, ராமச்சந்திரன், தங்கவேல் உள்ளிட்டோரும் பசும்பொன்னில் இருந்து மதுரை வந்திருந்தனர்.

பகல் 3.20 மணிக்கு முதல்வர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் முன்னிலையில் லாக்கரில் இருந்து தங்கக் கவசம் வைக்கப்பட்டிருந்த பெட்டி வெளியே எடுத்து வரப்பட்டது. முத்திரையை அகற்றி, தங்கக் கவசத்தை வெளியே எடுத்தபோது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதைப்பார்த்து வணங்கினர். பின்னர் கவசத்தை காந்திமீனாளிடம் கொடுத்துவிட்டு முதல்வர் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்.எல்.ஏ.க்கள் மா.முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், கருப்பையா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அதன்பின் ராமநாதபுரம் மாவட்ட போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் தங்க கவசம் கார் மூலம் பசும்பொன் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x