Published : 24 Jul 2016 10:38 AM
Last Updated : 24 Jul 2016 10:38 AM

சென்னை போர் நினைவுச் சின்னத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக் கொடி: முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார்

சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிறுவப் பட்டுள்ள 24 மணி நேரமும் பறக்கக் கூடிய தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா நேற்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய தேசியக் கொடியை சூரிய உதயத்துக்கு பின்பே ஏற்ற வேண்டும். சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கிவிட வேண்டும். இரவில் கொடியை பறக்கவிடக் கூடாது. அதன்படி மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பறக்க விடப்படும் தேசியக் கொடி, மாலை 6 மணிக்கு இறக்கப்பட்டு விடுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேசியக் கொடியை பறக்கவிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தேசியக் கொடி, 24 மணி நேரமும் பறக்கிறது.

அதேபோல, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் 24 மணி நேரமும் பறக்கக் கூடிய தேசியக் கொடியை நிறுவ மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, போர் நினைவுச் சின்னத்தில் 30.5 மீட்டர் உயர கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது.

இந்த தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா நேற்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்பிராந்திய ராணுவ அதிகாரி ஜக்பீர் சிங், கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, தமிழகம் - புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x