Published : 09 Jun 2017 03:47 PM
Last Updated : 09 Jun 2017 03:47 PM

ம.பி. சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் மான்ட்சர் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் பலியானதை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பத்திரிக்கைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் விளைப் பொருட்களுக்கு விலை தீர்மானிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் மீது மத்தியப் பிரதேச மாநில பி.ஜே.பி அரசு காவல்துறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் மாண்டு போயுள்ளனர்.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டுமெனக் கோரியும், வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மத்திய பிரதேச விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகளின் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜுன்-14ந் தேதி காலை திருவாரூரில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் மு.சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் மத்திய - மாநில பி.ஜே.பி அரசுகளுக்கு எதிராகவும் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x