Published : 03 Aug 2016 07:56 AM
Last Updated : 03 Aug 2016 07:56 AM

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி தொடங்கியது: இந்து மதத்தில் வாழ்க்கைமுறை சேவையை அடிப்படையாக கொண்டது - பதஞ்சலி யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து

இந்து மதத்தில் வாழ்க்கை முறையே சேவையை அடிப்படையாகக் கொண்டது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார். 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. சுற்றுச் சூழலை பராமரித்தல், பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், எல்லா ஜீவராசிகளையும் பேணுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை வலியுறுத்தி நடக்கும் இக்கண்காட்சியை யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு, நதிகள் இணைப்பை வலியுறுத்தி சென்னை நங்கநல்லூர், ஐ மா மந்திர் ஜைன கோயிலில் இருந்து கங்கை, காவிரி மங்கல தீர்த்த கலச யாத்திரை புறப்பட்டது. சுமார் 2 ஆயிரம் வட இந்திய பெண்கள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு, கங்கை, காவிரி நீரை குடத்தில் சுமந்தவாறு கண்காட்சி நடக்கும் திடலுக்கு சென்றனர்.

மேலும், ஐ மா மந்திரில் இருந்து யோகா குரு பாபா ராம் தேவ், சீக்கிய மத குரு ஞானி இக்பால் சிங், தர்மசாலா கோயில் தர்மாதிகாரியும் ஜைன மத அறிஞருமான வீரேந்திர ஹெக்டே, திபெத்திய ஆய்வுகளுக்கான மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரும், பவுத்த மத அறிஞருமான கெஷே நவாங் சாம்தென் ஆகியோர் 4 ரதங்களில் ஊர்வலமாக சென்று கண்காட்சி திடலை அடைந்தனர்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் வரவேற்புக் குழுவில் இடம்பெற்றுள்ள சவுமியா அன்புமணி, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி அமைப்பின் தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதாவது:

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பல மதங்கள் சேவையை கற்றுத் தருகிறோம் எங்களிடம் வாருங்கள் என்று அழைப்புவிடுக்கின்றன. ஆனால், இந்து மதம் அப்படியல்ல. இந்து மதத்தில் வாழ்க்கைமுறையே சேவையை அடிப்படையாக கொண்டதுதான். எனவேதான் நாங்கள் யாருக்கும் சேவையை கற்றுத் தருகிறோம் என்று அழைப்பு விடுவிக்கவில்லை. சேவையைக் கற்றுக்கொள்கிறோம் என்று யாரிடமும் செல்வதில்லை.

இந்து மதம் மற்ற மதங்களுக்கு எதிரான மதமல்ல. வேதங்களில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இருப்பதாகக் கூறி வேதம் படித்த என்னை நாடி பலர் வருகின்றனர். வேதத்தை படிப்பது என்பது உலகத்தையே படிப்பதற்கு சமமாகும்.

இந்து மதம் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் எதிரானது என்று சிலர் வதந்தி கிளப்புகின்றனர். அது உண்மையில்லை. இந்து மதம் சாதியரீதியாக ஏற்றத்தாழ்வு பார்ப்பதாக சொல்கின்றனர். வர்ணாசிரம முறைப்படி பிரிக்கப்பட்ட சாதிகள் உடலின் அங்கங்கள் போன்றவை. அவற்றில் ஏதாவது ஒரு அங்கத்துக்கு சிதைவு ஏற்பட்டாலும், வாழ்க்கை கடினமாகும். இன்றைக்கும் இந்தியாவில் பலரும் பல்வேறு மதங்களுக்கு மாறியிருக்கலாம். ஆனால், அவர்களின் முன்னோர்கள் ஆதி காலத்தில் ரிஷிகளாக இருந்தவர்களே.

ஜாகீர் நாயக் கருத்துகளை முன் வைத்து பல்வேறு சர்ச்சைகள் வருகின்றன. அவர் ஒரு மதத்தின் தலைவர் அல்ல. திரும்பவும் சொல்கிறேன், இந்து மதம் மற்ற மதங்களுக்கு எதிரானது அல்ல. எல்லாவற்றையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். தினசரி 10 நிமிடம் யோகா செய்யுங்கள். உங்கள் குடும்ப , சமூக வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்.

இவ்வாறு பாபா ராம்தேவ் பேசினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து அறிமுகவுரையாற்றிய டிவிஎஸ் கேபிடல் அதிபர் கோபால் னிவாசன் பேசும்போது, “2009-ம் ஆண்டு 30 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, தற்போது 400 அரங்குகளுடன் பிரம்மாண்டமான முறையில் நடக்கிறது. எஸ்.குருமூர்த்தியின் வழிகாட்டுதலால் இக்கண்காட்சி மிகப் பெரியளவில் நடக்கிறது. இந்து மதத்தில் உள்ள அமைப்புகள் செய்யும் சேவைகள் வெளியில் தெரிவதே இல்லை. இதனால், இந்து மதம் சேவை செய்யவில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் இந்து மதம் தர்மத்தில் நம்பிக்கையுள்ள மதமாகும். இந்தியாவில் செய்யப்படும் சேவைகளில், 40 சதவீதம் அளவு இல்லங்களில் இருந்தே பெறப்படுகின்றன. 90 சதவீதம் வீடுகளில் உள்ளவர்கள் மாதம் ரூ.8 ஆயிரம் அளவுக்கு நாடு முழுவதும் சேவைக்காக செலவழிக்கின்றனர். இந்து மதம்தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆணி வேராக உள்ளது” என்றார்.

சீக்கிய மத குரு ஞானி இக்பால் சிங், தர்மசாலா கோயில் தர்மாதிகாரியும் ஜைன மத அறிஞருமான வீரேந்திர ஹெக்டே, திபெத்திய ஆய்வுகளுக்கான மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரும், பவுத்த மத அறிஞருமான கெஷே நவாங் சாம்தென் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தின் சேவைகள் குறித்து பேசினர். இந்த விழாவில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி நிறைவுரையாற்றினார். இதைத் தொடர்ந்து திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்களை உணர்த்தும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 400-க்கும் அதிகமான இந்து அமைப்புகள் கண்காட்சி திடலில் அரங்குகளை அமைத்துள்ளன. தினசரி காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கவுள்ளது. இன்றைய தினம் காலை கங்கா வந்தனம் மற்றும் பூமி வந்தனம் நிகழ்வுகள் நடக்கவுள்ளன. இதே போல், ஆச்சார்ய வந்தனம், கன்னியா வந்தனம், கோ வந்தனம், கஜ வந்தனம், துளசி வந்தனம், பாரத மாதா வந்தனம், பரமவீர் வந்தனம், விருக்‌ஷ வந்தனம், நாக வந்தனம் ஆகிய நிகழ்வுகளும் கண்காட்சியையொட்டி நடத்தப்படவுள்ளன.

கண்காட்சி நடக்கும் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் ருத்திராட்ச லிங்கம், சைவ மற்றும் வைணவ கடவுள்களின் சிலைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x