Last Updated : 22 Jun, 2016 08:20 AM

 

Published : 22 Jun 2016 08:20 AM
Last Updated : 22 Jun 2016 08:20 AM

பள்ளி மாணவர்கள் வாகனம் ஒட்டுவதால் விபரீதம்: ஓராண்டில் 2,700 விபத்துகள், 72 பலிகள் - கண்காணிக்காத அதிகாரிகள்; கண்டிக்காத பெற்றோர்

பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய தால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 2,700 விபத்துகள் நடந்து, 72 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், ஆபத்தை உணராமல் மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்கதையாகவே உள்ளது.

“பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டுவரக் கூடாது. மீறினால் அவர்கள் மீது ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பள்ளிக்கல்வித் துறை கடந்த மே 29-ம் தேதி உத்தரவிட்டது. இதேபோன்ற உத்தரவை பள்ளிக்கல்வித் துறை கடந்த 2014-ம் ஆண்டும் பிறப்பித்திருந்தது. எத்தனை முறை உத்தரவு போட்டும், மாணவர் களின் நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

பெற்றோர் ‘உடந்தை’

சென்னை மாநகரில் காலை நேரத்தில் தலைக்கவசமும் அணியாமல், மற்ற வாகனங்களையும் பொருட்படுத்தாமல், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் விரைந்து செல்வதை பல இடங்களிலும் காண முடிகிறது. இதில் பெரும்பாலோர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள். “அடுத்தடுத்த டியூஷன்களுக்கு சென்று, நேரத்துக்கு பள்ளிக்கும் செல்வதற்கு இருசக்கர வாகனம் தான் வசதியாக இருக்கிறது” என்று பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர்.

விதிகளை மீறி மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால், அவர்கள் மட்டுமின்றி எதிரே வருபவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கண்காணிப்பு அவசியம்

இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு சில வாரங்கள் வரை மட்டுமே பின்பற்றப்படுகின்றன. பின்னர், பள்ளி நிர்வாகம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்ளாமல் விடுவதால், மாணவர்கள் மீண்டும் வாகனங்களை ஒட்டத் தொடங்குகின்றனர். இதைத் தடுக்க, நகரின் முக்கிய இடங்கள், பள்ளிகள் உள்ள சாலைகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெற்றோருக்கு சிறை தண்டனை

ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதுவும் 50 சி.சி.க்கு குறைவான திறனுடைய கியர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டும் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிக திறன் கொண்ட வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கடந்த ஓராண்டில் மட்டும் 16 வயதுக்கு குறைவானவர்கள் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதில் தமிழகம் முழுவதும் 2,700 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டப் பிரிவு 180-ன்படி பள்ளி மாணவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பல ஊர்களில் சாலை விபத்துகளில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே, பள்ளிக்

கல்வித்துறை உத்தரவு பிறப்பித்

துள்ளது. மாணவர்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் இதை அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக, செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பிள்ளைகள் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

ஆலோசனை மையம் தேவை

‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன் கூறிய போது, ‘‘பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக உள்ளது. அதேநேரம், அவற்றை பயன்படுத்த தடை விதிப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகாது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து பள்ளிகளிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும். அங்கு, வாரத்தில் ஒரு நாளாவது மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x